ரூ. 3 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்த 5 பேர் கைது

198

சென்னை, கோடம்பாக்கத்தில் ரூ. 3 கோடி மதிப்பிலான சொத்தை போலி ஆவணங்கள் மூலமாக நில அபகரிப்பு செய்த ஐந்து நபர்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

சென்னை, தி,நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் சந்திரசேகரன் என்பவருக்கு சொந்தமான இடம் கோடம்பாக்கம் கிராமம், வாசுதேவன் நகரில் சுமார் 2400 சதுரஅடி உள்ளது. இந்த இடத்தை போலியான ஆவணங்கள் மூலமாக நில அபகரிப்பு செய்யப்பட்டுள்ளதாக சந்திரசேகரன் சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரிடம் புகார் அளித்தார். அது தொடர்பாக விசாரணை நடத்தும்படி கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு உத்தரவிட்டார்.

மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் மகேஷ்வரி மேற்பார்வையில், மத்திய குற்றப்பிரிவு -3, காவல் துணை ஆணையாளர் ஆரோக்கியம் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு-3, காவல் உதவி ஆணையாளர் ராஜ்பால் மற்றும் காவல் ஆய்வாளர் பெமிலாஷெர்லி ஆகியோரின் விசாரணையின் பேரில் எதிரிகளை தேடி வந்தனர். இந்நிலையில் நில மோசடியில் ஈடுபட்ட வளசரவாக்கத்தைச் சேர்ந்த ரவி, 58, அடையாறு பாஸ்கர், 56, சுரேஷ், 38, குரோம்பேட்டை மனோகரன், 56, ஆனந்தன், 58 ஆகியோர் போலி ஆவணங்களை உருவாக்கி, அதன் மூலம் நிலஅபகரிப்பு செய்ததை போலீசார் துப்புதுலக்கினர். ஐந்து பேரையும் நேற்று கைது செய்த போலீசார் விசாரணைக்குப்பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.