ஆள்மாறாட்டம் மூலம் ரூ. 4 கோடி மதிப்புள்ள நிலம் அபகரிப்பு: 5 பலே ஆசாமிகள் கைது

154

ஆள்மாறாட்டம் மூலம் ரூ. 4 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த 5 பலே ஆசாமிகளை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

சென்னை, சாலிகிராமத்தை சேர்ந்த லைசா ஜோஸ்பின் (வயது 88) என்பவருக்கு சொந்தமாக திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் வட்டம், கொன்னுார் கிராமத்தில் சுமார் 3544 சதுரடி கொண்ட காலி வீட்டு மனை உள்ளது. இந்த மனையானது ஜோஸ்பின் தந்தை வேளாங்கண்ணி என்பவரால் கடந்த 1965-ஆம் ஆண்டு கிரையம் பெற்று அனுபவித்து வந்துள்ளார். வேளாங்கன்னி கடந்த 1979ம் ஆண்டு இறந்த பின்னர் ஜோஸ்பினின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளது. அந்த இடம் காலியாக இருப்பதால் போலி ஆவணங்கள் மற்றும் ஆள்மாறாட்டம் மூலம் அபகரிப்பு சிலர் திட்டமிட்டுள்ளனர். அதனையடுத்து அவர்கள் சதித்திட்டம் தீட்டி ஆள்மாறாட்ட நபராக வேளாங்கண்ணி என்னும் ஆந்திரா மாநிலத்தை சார்ந்த ஒரு பெண் நபரை முன்னிறுத்தி போலியான கிரைய ஆவணம் பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. அது தொடர்பான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஜோஸ்பின் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் செந்தில்குமாரி ஆலோசனையின் பேரில் மத்திய குற்றப்பிரிவு- துணைக்கமிஷனர் ஆரோக்கியம் மேற்பார்வையில் மத்திய குற்றப்பிரிவு-3, காவல் உதவி ஆணையாளர் ராஜபால் மற்றும் காவல் ஆய்வாளர் முருகேஷ்வரி ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில் மோசடி நடந்தது உண்மை என தெரியவந்தது. அதனையடுத்து இந்த நில மோசடி தொடர்பாக சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த பாபு (57), திநகர் குருசாமி (63), திருவேற்காடு முத்து (55), வில்லிவாக்கம் நாகராஜ் (52), ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் மீது போலி ஆவணங்களை உருவாக்கி, ஆள்மாறாட்டம் செய்து, அதன் மூலம் ஜோஸ்பினின் ரூ. 4 கோடி மதிப்பிலான சொத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரிப்பு செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டட 5 நபர்களும் இன்று (21.11.2023) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யபட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.