வீரபத்ரன் சாமி கோவிலுக்குள் பெட்ரோல் குண்டு வீசிய நபர் கைது

174

சென்னை கொத்தவால்சாவடியில் வீரபத்ரன் சாமி சிலை மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, பாரிமுனை, கொத்தவால்சாவடி, வீரபத்ரன் கோவில் தெருவில் வீரபத்ரன் கோவில் உள்ளது. கோவிந்தப்பநாயக்கன் தெரு, வீரபத்ரன் தெரு சந்திப்பில் உள்ள இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. இந்த கோவிலை ‘வீரபத்ரன் தேவஸ்தானம்’ என்ற அமைப்பு சார்பில் நிர்வாகம் செய்து வருகின்றனர். இன்று 10.11.2023 வெள்ளிக்கிழமை என்பதால் அதிகாலையில் இருந்து கோவிலில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடந்து கொண்டிருந்தன. பக்தர்கள் வருகை அதிக அளவில் இருந்தது. இந்நிலையில் அங்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சாமி கும்பிட்டிருந்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென இடுப்பு பகுதியில் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் நிரப்பிய பீர்பாட்டிலை எடுத்து தீ வைத்து கொளுத்தி சாமி சிலை இருந்த கருவறை மீது வீசி எறிந்தார். அது சாமி சிலை மீது பட்டு கீழே விழுந்து உடைந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைக் கண்ட பக்தர்கள் பதட்டம் அடைந்து அங்குமிங்குமாக சிதறியபடி ஓடினர்.

கோவிலில் இருந்த பூசாரி மற்றும் பொதுமக்கள் தப்பியோட முயன்ற பெட்ரோல் குண்டு வீசிய நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். உதவிக்கமிஷனர் வீரகுமார் தலைமையில் முத்தியால்பேட்டை போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பெட்ரோல் குண்டு வீசிய நபரை பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தியதில் அவர் அதே பகுதி கொத்தவால் சாவடியைச் சேர்ந்த முரளி கிருஷ்ணன் (வயது 39) என்பது தெரியவந்தது. கோவிலுக்குள் சாமி மீது பெட்ரொல் குண்டு வீசியது ஏன் என்று போலீசார் முரளி கிருஷ்ணனிடம் கேட்ட போது, ‘‘நான் கொத்தவால் சாவடி மார்க்கெட் பகுதியில் முந்திரி மொத்த வியாபாரம் செய்து வருகிறேன். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. எத்தனையோ முறை வீரபத்ரன் சாமியிடம் எனது குறையை தீர்க்க கோரி முறையிட்டேன். ஆனால் சாமி எனக்கு எதுவும் செய்து தரவில்லை. அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் பெட்ரோல் குண்டு வீசினேன்’’என போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

தொழில் நஷ்டமடைந்ததால் முரளி கிருஷ்ணன் போதைப்பழக்கத்துக் அடிமையாகி அதற்காக மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார். தற்போது அவரது அண்ணன் வீட்டில் அவரை கவனித்து வந்துள்ளனர். முரளி கிருஷ்ணன் எந்த பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வாங்கினார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் 25ம் தேதியன்று ஆளுநர் மாளிகை முன்பு ரவுடி ஒருவர் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனையடுத்து சென்னையில் உள்ள பெட்ரோல் பங்குகளில் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி விற்பனை செய்யக்கூடாது என போலீசார் வாய்மொழி உத்தரவிட்டிருந்தனர். இதனால் பெட்ரோல் பங்குகளிலும் பாட்டில்களில் பெட்ரோல் விற்பனை செய்யப்படாமல் உள்ளது. ஆனல் முரளி கிருஷ்ணன் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பியது எங்கே என்பது குறித்து போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், கோவிலுக்குள் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் கொத்தவால் சாவடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.