மிக்ஜாம் புயல்: மீட்புப் பணியில் 18 ஆயிரம் போலீசார்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பேட்டி

181

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மிக்ஜாம் புயல் மீட்பு பணிகளுக்காக, சென்னை பெருநகர காவல் சார்பில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள சென்னை பெருநகர காவல் பேரிடர் மீட்பு குழுவினரை (DDRT) சந்தித்து, அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கி மீட்பு பணி உபகரணங்களை பார்வையிட்டார்.

 

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மிக்ஜாம் புயல் உருவாகி, தமிழக கடற்கரையோர பகுதிகளில் கரையை கடக்க உள்ளதாகவும், இதனால் இனிவரும் நாட்களில் மிக கனமழை மற்றும் புயல் காற்று வீசக்கூடும் என வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதால், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் இன்று (02.12.2023) காலை, எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் மீட்பு பணிகளுக்காக தயார் நிலையில் உள்ள சென்னை பெருநகர காவல் பேரிடர் மீட்பு குழுவினரை (GCP- DDRT) நேரில் சந்தித்து அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கி, மீட்பு பணிகளுக்கான உபகரணங்களை பார்வையிட்டார்.

தொடர்ந்து சந்தீப்ராய் ரத்தோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி விவரம்:

• 12 காவல் மாவட்டங்களில் உள்ள சென்னை பெருநகர காவல் பேரிடர் மீட்பு குழுவினர் (GCP- DDRT) 24 மணி நேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டு, மீட்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
• ஒவ்வொரு மீட்பு குழுவும் ஒரு தலைமைக்காவலர் தலைமையில் 10 காவல் ஆளிநர்கள் என மொத்தம் 120 காவல் ஆளிநர்கள் இருப்பர்.

• ஒவ்வொரு மீட்பு குழுவுக்கும் மீட்பு பணிகளுக்காக தலா ஒரு வாகனம் என 12 வாகனங்களும். ரப்பர் படகு, மிதவை ஜாக்கெட்டுகள், தனித்துவமான ஜாக்கெட்டுகள் (Distinctive Jackets), கயிறு உட்பட 21 மீட்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
• ஒவ்வொரு மீட்பு குழுவினருக்கும் நீச்சல் மற்றும் மீட்பு பணிகளுக்கான பிரத்யேக பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது.

 பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.

• காவல் ஆணையரகத்தில், அவசர செயலாக்க மையம் (Emergency Operation Centre (EOC) துவக்கப்பட்டுள்ளது.
• அவசர செயலாக்க மையம் 24 மணி நேரமும், சுழற்சி முறையில், காவல் துணை ஆணையாளர் (DC) தலைமையில் செயல்படும்.
• சென்னை பெருநகர காவல்துறையின், சட்டம் மற்றும் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, மத்திய குற்றப்பிரிவு உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் என 18,000 காவல் அலுவலர்கள் புயல் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


• காவல் அதிகாரிகளின் குழுக்களில் ஒருங்கிணைந்து பணியாற்ற 2,000 ஊர்க்காவல்படையினர் (Home Guard) வரவழைக்கப்பட்டு மீட்பு மற்றும் நிவாரண பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
• 2,500 போக்குவரத்து காவல் ஆளிநர்கள் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், 200 ஆயுதப்படை காவல் ஆளிநர்கள் மற்றும் 100 போக்குவரத்து வார்டன்கள் (Traffic Warden) போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

• சென்னை பெருநகர காவல்துறை, பெருநகர சென்னை மாநகராட்சி(GCC), மாநகர போக்குவரத்து கழகம் (MTC), சென்னை மெட்ரோ ரயில் (CMRL), நெடுஞ்சாலைத்துறை (Highways), மின்சாரத்துறை (TNEB), சுகாதாரத்துறை (Health), தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை (Fire & Rescue) ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து மீட்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
• மேலும், ஒருங்கிணைந்த மேற்படி துறைகளுடன் வாட்சப் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, அவ்வப்போது நடவடிக்கைகள் வாட்சப் குழு மூலம் உடனுக்குடன் பரிமாற்றம் செய்து நடவடிக்கைகள் மற்றும் மீட்பு பணிகள் கொள்ளப்படும்.
• மழைநீர் தேங்கும் தாழ்வான பகுதிகள், கால்வாய் ஒட்டியுள்ள பகுதிகளை தீவிரமாக கண்காணித்து, உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
• சாலைகளில் உள்ள சிதிலமடைந்த மின்சார கம்பங்கள் மற்றும் மின்சார பெட்டிகள் ஆகியவற்றினை கண்காணித்து மின்கசிவு ஏற்படாத வண்ணம் மின்வாரிய துறையினருக்கு உடனுக்குடன் தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
• அனைத்து காவல் நிலைய சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் தங்களது காவல் நிலைய எல்லையில் ரோந்து பணிகள் தீவிரமாக மேற்கொண்டு கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
• ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு, அவசர மருத்துவ உதவிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
• சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து சுற்றுக்காவல் ரோந்து வாகனங்கள் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு புயல், மழைவெள்ளம் குறித்து எச்சரிக்கைகள் வழங்கும் வகையில், அறிவுறுத்தப்பட்டு ள்ளது.
• அனைத்து சுற்றுக் காவல் ரோந்து வாகனங்களிலும் மருத்துவ உதவிக்காக முதலுதவி பெட்டிகள் வைத்துக் கொள்ளவும், டார்ச் லைட், கயிறு, ஒளிரும் விளக்குகள், குடிநீர் பாட்டில்கள் வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
• காவல் மருத்துவமனையிலிருந்து வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களுக்கு முதல் மருத்துவ சிகிச்சை அளிக்க தலா 1 குழு வீதம் 2 சிறப்பு மருத்துவ உடனடி சிகிச்சை மீட்பு குழுக்கள் (Special Medical First Response Team) தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
• ஆம்புலன்ஸ் மற்றும் அவசர உதவி வாகனங்கள் செல்லும் வகையில் சாலைகளில் கிரீன் காரிடர் (Green Corridor) வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
• குறிப்பாக பொது இடங்கள் மற்றும் தனியார் இடங்களில் வைக்கப்பட்டுள்ள பதாகைகள், விளம்பர பலகைகள் மற்றும் புயல் காற்றினால் பறக்கக்கூடிய பிளாஸ்டிக், இரும்புத்தகடு, கட்டுமான பணியில் உள்ள கண்ணாடி மற்றும் தடுப்புகள் உள்ளிட்ட இலகு பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு ரோந்து வாகன குழுவினர் மூலம் அறிவுறுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.
• மாநகர போக்குவரத்து கழகத்திலிருந்து 2 இழுவை வாகனங்கள் பெறப்பட்டு, சுரங்கப்பாதை, மழைநீர் தேங்கும் இடங்களிலுள்ள பழுதடைந்துள்ள வாகனங்களை அப்புறப்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
• அவ்வப்போது சூழ்நிலைக்கேற்ப போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுவதை, உடனுக்குடன் அப்பகுதி மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
• கடற்கரை பகுதிகளில் மிக்ஜாம் புயலின் காரணமாக அலைகள் வேகம் அதிகப்படியாகவும் ஆபத்தான முறையில் இருப்பதினால் பொதுமக்கள் யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
• தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியிருந்தால், அங்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரைகள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
• புயல் காரணமாக அவசர உதவி மற்றும் இடர் ஏற்பட்டால், காவல்துறை அவசர உதவி எண்.100 (அ) 112, சென்னை பெருநகர மாநகராட்சி உதவி எண்.1913, தீயணைப்பு மற்றும் மீட்பு குழு அவசர உதவி எண்.101 ஆகியவற்றில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.