11 மாதங்களில் 639 குற்றவாளிகள் மீது பாய்ந்த குண்டாஸ்: போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அதிரடி நடவடிக்கை

159

சென்னை நகரில் கடந்த 11 மாதங்களில் 639 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சென்னை பெருநகர காவல்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

சென்னை நகரில் தொடர் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போக்சோ, பணமோசடி, பைர்கிரைம், வழிப்பறி, கொலை, கொள்ளை, ரவுடி மாமூல் உள்ளிட்ட குற்றங்களில் அடிக்கடி ஈடுபடும் நபர்கள் மீது அவர்கள் ஓராண்டு ஜாமினில் வெளிவரா வண்ணம் குண்டர் சட்டம் பயன்படுத்தப்படுகிறது. கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் அந்தந்த காவல் மாவட்ட துணை ஆணையர்கள் தலைமையில் குற்றவாளிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அது தொடர்பாக சென்னை நகர கமிஷனர் அலுவலகம் தெரிவித்துள்ளதாவது, ‘‘கடந்த ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் 29ம் தேதி வரை சென்னை நகரில், கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 434 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 104 குற்றவாளிகளும், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 77 பேரும், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 4 பேர், பாலியல் தொழில் நடத்திய 13 பேர்,பெண்களை மானபங்கம்படுத்திய 4 பேர் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 2 குற்றவாளிகள் மற்றும் உணவு பொருள் கடத்தல் பிரிவில் 1 குற்றவாளி என மொத்தம் 639 குற்றவாளிகள் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு காவல் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் சென்னை நகரில்  7 நாட்களில் 24 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 49 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. அதுவே இந்த ஆண்டு நவம்பர் மாதம் மொத்தம் 117 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.