கொலை முயற்சி குற்றவாளிகள் 3 பேர் மீது குண்டாஸ்: எஸ்பி பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில் கலெக்டர் நடவடிக்கை
தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் 3 பேரை எஸ்பி பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி to திருச்செந்தூர் ரோடு, பொட்டல்காடு ஜங்ஷன் பகுதியில் டீக்கடை உள்ளது. இங்கு கடந்த 19.04.2024 அன்று முத்தையாபுரம் முள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் (19) என்பவரையும், டீக்கடையின் உரிமையாளரான வேல்ராஜ் (45) என்பவரும் முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் தூத்துக்குடி புதுக்கோட்டை, குலையன்கரிசல் பகுதியை சேர்ந்தவர்களான ஹரிசிங் (23), சக்திவேல் (24) மற்றும் ரமேஷ் ரேவிந்த் (24) ஆகிய மூவரையும் முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட எதிரிகளான ஹரிசிங், சக்திவேல் மற்றும் ரமேஷ் ரேவிந்த் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்வேல்குமார் தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணனுக்கு அறிக்கை தாக்கல் செய்தார். மேற்படி காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் எஸ்பி பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி தூத்துக்குடி ஹரிசிங், சக்திவேல் மற்றும் ரமேஷ் ரேவிந்த் ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்வேல்குமார் மேற்படி 3 எதிரிகளையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.