சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் கடந்த 1 மாதத்தில் மத்திய குற்றப்பிரிவு வழக்குகளில் நிலுவையில் இருந்த 86 நீதிமன்ற பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டது.

சந்தீப் ராய் ரத்தோர், IPS., சென்னை பெருநகர காவல் ஆணையாளர்
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு வழக்குகளில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை பிடிக்கவும், நிலுவையில் உள்ள நீதிமன்ற பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் மகேஷ்வரி அறிவுரையின்பேரில், மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளர்கள் நேரடி மேற்பார்வையில், மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு தலைமறைவு குற்றவாளிகளை தேடி வந்தனர்.

மகேஷ்வரி, IPS., மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர்
அதன்பேரில், கடந்த 17.07.2023 முதல் 16.08.2023 வரை காவல் குழுவினரின் தீவிர தேடுதல் மேற்கொண்டதன்பேரில், மத்திய குற்றப்பிரிவின் சைபர் குற்றப்பிரிவு, வங்கி மோசடி, நம்பிக்கை ஆவணங்கள் மோசடி, நில மோசடி, போலி பாஸ்போர்ட், கந்துவட்டி, சீட்டு மோசடி, மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் வழக்குகளில் தொடர்புடைய நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 86 குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, மத்திய குற்றப்பிரிவின் 86 நீதிமன்ற பிடியாணைகள் நிறைபேற்றப்பட்டன. இதில் நீண்ட நாட்கள் தலைமறைவாக இருந்த 2 குற்றவாளிகள் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த 7 குற்றவாளிகளின் நீதிமன்ற பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேற்படி சிறப்பு கவனம் செலுத்தி, சிறப்பாக பணிபுரிந்து, நீதிமன்ற பிடியாணைகள் நிறைவேற்றிய மத்திய குற்றப்பிரிவு காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் அடங்கிய குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் வெகுவாக பாராட்டினார்.