தமிழகம் முழுவதும் சிறை அதாலத் மூலம் 202 கைதிகள் விடுதலை

201

தமிழகம் முழுவதும் சிறைகளில் சிறை அதாலத் மூலம் வழக்குகள் பரிசீலனை செய்யப்பட்டு 202 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தமிழக சிறைத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள சிறைகளில் இல்லவாசிகளை குறைக்கும் பொருட்டு அதற்கான நடவடிக்கைகளில் டிஜிபி அமரேஷ் புஜாரி சிறைத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். லோக் அதாலத் மூலம் உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் கைதிகளின் தண்டனைக்காலம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி புழல், மத்திய சிறை-2 சிறைக்குள் சிறைக்கைதிகளுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் மற்றும் தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு கவுரவத் -தலைவர் வைத்தியநாதன் தலைமையிலும், சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சுப்பிரமணியம் முன்னிலையிலும் இன்று (26.08.2023) சிறை அதாலத் நிகழ்ச்சி நடந்தது.

 

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் நசீர் அகமத் பங்கேற்றார். திருவள்ளூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை அமர்வு நீதிபதி S. செல்வ சுந்தரி, காஞ்சிபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை அமர்வு நீதிபதி J. மாவிஸ் தீபிகா சுந்தரவதனா, சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் தமிழ் செல்வி மற்றும் நீதிபதி. சுதா, மேலும் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட நீதித்துறை முதன்மை நடுவர் மற்றும் 20-க்கும் மேற்பட்ட நீதிமன்ற நடுவர்கள் கலந்துகொண்டார்கள்.

நடுவர்கள் சிறை அதாலத் மூலம் பிணையில் செல்ல இயலாமல் சிறையில் இருக்கும் சிறு வழக்குகளில் ஈடுபட்ட சிறைவாசியின் வழக்குகள் தொடர்பாக பரிசீலித்து அவர்களை விடுவிக்க உத்தரவிட்டனர். அந்த வகையில் இன்று தமிழகம் முழுவதும் 202 சிறைக்கைதிகள் சிறையில் இருந்த நாட்களை தண்டனைக் காலமாக கருதி விடுதலை செய்யப்பட்டனர்.

 

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை தலைமை இயக்குநர் அமரேஷ் புஜாரி, சென்னை சரக டிஐஜி முருகேசன், சிறைக்கண்காணிப்பாளர்கள் நிகிலா நாகேந்திரன், கிருஷ்ணராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.