தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் கைதிகளுக்கு கணிணி பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக சிறைத்துறை டிஜிபி அமரேஷ் புஜாரி தெரிவித்தார்.

தமிழக காவல்துறை சிறைத்துறை டிஜிபியாக அமரேஷ் புஜாரி நியமிக்கப்பட்டதும் அங்கு பல்வேறு சீர்த்திருத்தங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் யோகா பயிற்சி, விளையாட்டுகள் மற்றும் இசை வாசிப்பு ஆகிய செயல்பாடுகளின் மூலமாக இல்லவாசிகளை சீர்திருத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக வேலூர் மத்திய சிறையில் டிஜிபி அமரேஷ் புஜாரி உத்தரவின் பேரில் வேலூர் தொழில்நுட்ப பல்கலைகழகத்துடன் இணைந்து “இல்லவாசிகளுக்கான கணினி பயிற்சி மையம்” நேற்று துவங்கப்பட்டது. மேலும் இதன் துவக்க விழாவிற்கு தலைமை விருந்தினர்களாக வேலூர் தொழில்நுட்ப கல்லூரியின் துணை தலைவர்கள் சங்கர் விஸ்வநாதன், ஜி.வி.செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு கணினி பயிற்சி மையத்தை துவக்கி வைத்தனர். இந்த விழாவில் வேலூர் சரக டிஐஜி செந்தாமரைக்கண்ணன் முன்னிலை வகித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் அப்துல் ரஹ்மான் செய்து வைத்தார்.
இந்த பயிற்சி தொடர்பாக சிறைத்துறை டிஜிபி அமரேஷ் புஜாரி கூறுகையில், ‘‘இந் கணினி பயிற்சி மையம் மூலமாக இல்லவாசிகளுக்கு M.S.Office பற்றிய பயிற்சி பயிற்று விக்கப்படுகிறது. இதன் மூலம் இல்லவாசிகள் சிறையில் உள்ள தண்டனை காலங்களை பயனுள்ளதாக செலவிட்டு தங்களது கணிப்பொறி திறனை மேம்படுத்த முடியும். மேலும் இந்த கணினி பயிற்சி பெறும் சிறைவாசிகள் விடுதலைக்கு பிறகு சுயமாக தொழில் துவங்கவும் தங்களுடைய வாழ்வாதாரத்திற்கு தேவையான வருவாயை ஈட்டிக்கொண்டு சமூகத்தில் சிறந்த மனிதனாக வாழ முடியும்’’. இவ்வாறு தெரிவித்தார்.