சென்னை, புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.15,000/- அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2019ம் ஆண்டு புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் வசித்து வந்த 14 வயது சிறுமியிடம் ஒரு நபர் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பாக, சிறுமியின் தாயார் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் (AWPS) புகார் அளிக்கப்பட்டது. போலீசார் போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு இவ்வழக்கில் தொடர்புடைய 32 வயது நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர்.
இந்த வழக்கு விசாரணை இறுதி அறிக்கை தயார் செய்து, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், நீதிமன்ற வழக்கு விசாரணை முடிவடைந்து இவ்வழக்கில் நேற்று (17.03.2025) தீர்ப்பு வழங்கப்பட்டது. இவ்வழக்கில் 32 வயது எதிரி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளிக்கு மொத்தம் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.15,000- அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 2 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
மேற்படி வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தந்த 16 புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் குழுவிரை உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்.