3 மாதங்களில் 232 கடைகளுக்கு சீல்: 28 நாள் ரெய்டில் 1,264 கிலோ குட்கா, 2340 வௌிநாட்டு சிகரெட்டுக்கள் பறிமுதல்: சென்னை நகர காவல்துறை அதிரடி நடவடிக்கை
கடந்த 28 நாட்கள் குட்கா, மாவா புகையிலை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 144 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 165 நபர்கள் கைது. 1063.6 கிலோ குட்கா புகையிலை பொருட்கள், 206.2 கிலோ மாவா மற்றும் 2,340 வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல். கடந்த 3 மாதங்களில் குட்கா விற்பனை செய்த 232 கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுளை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் மூலம் ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ (DABToP – Drive Against Banned Tobacco Products) என்ற சிறப்பு சோதனை மேற்கொண்டு, குட்கா மற்றும் மாவா புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 27.03.2024 முதல் 23.04.2024 வரையிலான 28 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 144 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 165 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 1063.6 கிலோ குட்கா புகையிலை பொருட்கள், 206.2 கிலோ மாவா, 2,340 வெளிநாட்டு சிகரெட்டுகள், 3 செல்போன், பணம் ரூ.50,320/-, 5 இருசக்கர வாகனங்கள், 2 ஆட்டோக்கள் மற்றும் 3 இலகுரக வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், நடப்பாண்டில் 01.01.2024 முதல் 23.04.2024 வரை, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா புகையிலை பொருட்கள் வழக்குகளில் கைது செய்யப்பட்ட 21 குற்றவாளிகள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், நடப்பாண்டில் 01.01.2024 முதல் 31.03.2024 வரை, குட்கா, மாவா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்தது தொடர்பாக, 232 கடைகள் பூட்டி, சீல் வைக்கப்பட்டுள்ளன.
சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதால், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் உள்பட சட்டவிரோத பொருட்களை கடத்தி வருபவர்கள், பதுக்கி வைப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.