சென்னை பெருங்குடியை சேர்ந்த ஒரு நபர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோரிடம் கடந்த 04.03.2023-ம் தேதி அன்று ஒரு புகார் மனு அளித்தார். அந்த புகார் மனுவில், ‘ஆன்லைனில் பகுதி நேர வேலை செய்வதற்காக தன்னை வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டு பின்னர் டெலிகிராம் மூலம் மோசடி நபர் தொடர்பு கொண்டதாகவும் அதனை நம்பி அவர்கள் கொடுத்த பல்வேறு வங்கி கணக்குகளுக்கு ரூ. 66,22,450- வரையிலான பணத்தை டெபாசிட் செய்ததாகவும் ஆனால் தான் செலுத்திய தொகை ஏதும் தனக்கு திரும்ப வரவில்லை, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் தெரிவித்திருந்தார். அது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஷ்வரிக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். புலன் விசாரணையில் மோசடியாளர்களின் KYC, வங்கி கணக்குகள் மற்றும் வங்கி கணக்குகளுடன் தொடர்புடைய மொபைல் எண் விவரங்கள் வங்கியிலிருந்து சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இதில் சம்மந்தப்பட்ட வங்கி கணக்கு மணிஷ்குமார் என்பவர் பெயரில் உள்ளதும் அதை அவரது மகன் ரிதம் சாவ்லா என்பவர் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. அதனையடுத்து குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை காவல் குழுவினர் கடந்த 11.08.2023 அன்று உத்திர பிரதேசம் மாநிலம், ரேபரேலி சென்று அங்கு பதுங்கிருந்த குற்றவாளி ரிதம் சவ்லா, 20 என்பவரை கைது செயதனர். அவரிடமிருந்து 2 செல்போன்கள் மற்றும் 1 லேப்டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் ரிதம் சவ்லா, ஆன்லைனில் பகுதிநேர வேலை மோசடியில் ஈடுபட்டு பொதுமக்களிடமிருந்து பெற்ற பணம் ௫.1.6 கோடியை Crypto Currency ல் தான் வர்த்தகம் செய்ததை ஒப்புக்கொண்டார். இன்று (15.08.2023) குற்றவாளி ரிதம் சவ்லா, எழும்பூர் கூடுதல் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
இந்த வழக்கில் தொடர்புடைய பல்வேறு சந்தேகத்திற்குரிய வங்கி கணக்குகளிலிருந்து ரூ.19,10,000/- பணம் முடக்கம் செய்யப்பட்டது. மேற்படி வழக்கில் தொடர்புடைய குற்றவாளி மகாராஷ்டிரம் மாநிலம், தானே மாநகரம், மனப்பாட காவல் நிலைய வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது.