இணையதளம் மூலம் ரூ. 69 லட்சம் மோசடி செய்த குஜராத் ஆசாமியை சென்னை சைபர்கிரைம் போலீசார் கைது செய்தனர்.

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஒருவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். ‘‘கடந்த ஏப்ரல் மாதம் பெண் ஒருவர் என்னை டேட்டிங் செயலியில் தொடர்பு கொண்டார். பின்னர் சில மாதங்களுக்கு பிறகு டெலிகிராம் செயலி மூலம் எனது வருமான விவரங்கள், சொத்து விவரங்கள், வங்கி மற்றும் சேமிப்பு வைப்பு விவரங்கள் ஆகிய தகவல்களை பெற்றார். மேலும் சில மாதங்களாக டெலிகிராம் செயலி மூலம் குறுஞ்செய்தி மற்றும் ஆடியோ அழைப்புகள் மூலம் நல்ல உறவையையும், நம்பிக்கையையும் உருவாக்கினார். ஆனால் வீடியோ அழைப்பில் வர மறுப்பு தெரிவித்த அவர் பின்பு ஒவ்வொரு வாரமும் அந்நிய செலாவணி வர்த்தகத்தில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தைகள் கூறி என்னை அந்நிய செலாவணி வர்த்தகத்தில் முதலீடு செய்ய வைத்தார். அதன்படி நான் ரூ. 69,40,000- பணத்தை முதலீடு செய்தேன். பணத்தை பெற்றுக் கொண்டு என்னை மோசடி செய்து விட்டார்’’ என அந்த புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த புகார் மனு தொடர்பாக கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் செந்தில்குமாரி மேற்பார்வையில் சைபர் கிரைம் பிரிவு காவல் குழுவினர் புலன் விசாரணை நடத்தினர். இதில் சந்தேகத்துக்குறிய வங்கி கணக்கு விவரங்கள் பெறப்பட்டதில் மோசடி செய்தவர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. உடனடியாக தனிப்படை போலீசார் குஜராத் விரைந்து சென்று கலோலில் தங்கியிருந்து மேற்படி மோசடியில் ஈடுபட்ட சுதிர் தண்டன், (வயது 39) என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 1 செல்போன் மற்றும் 9 டெபிட் கார்டுகள் கைப்பற்றப்பட்டன. சுதிர்தண்டனை, அகமதாபாத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உரிய சட்ட நடவடிக்கைகளின் படி சைபர்கிரைம் போலீசார் சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர் நேற்று (01.12.2023) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
முதலீட்டு மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் டேட்டிங் அப்ளிகேஷன் தளங்கள் மூலம் குறிவைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களை நம்ப வைத்து திருமணம் செய்து கொள்வதாக பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் முதலீடு செய்ய வைத்து அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை மோசடி செய்கின்றனர். இதுபோன்ற ஆன்லைன் போலி முதலீட்டு மோசடி குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஏதேனும் சைபர் கிரைம் புகார்கள் அல்லது சந்தேகங்கள் இருப்பின், சைபர் கிரைம் உதவி எண் 1930 என்ற எண்ணை அணுகுமாறு அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் புகார் அளிக்குமாறு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் கேட்டுக் கொண்டுள்ளார்.