திருவள்ளூவர், அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசிய ஆர்பிவிஎஸ் மணியனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவரும், விவேக பாரதி அமைப்பின் நிறுவனருமான ஆர்.பி.வி.எஸ். மணியன், கடந்த 11ம் தேதி தி.நகரில் நடைபெற்ற கூட்டத்தில், பாரதியும் விவேகானந்தரும் என்ற தலைப்பில் பேசினார். அப்போது திருவள்ளுவர், அம்பேத்கர் மற்றும் பட்டியல் இனத்தவர்கள் குறித்து இழிவாக பேசியதாக மணியன் மீது விசிக கட்சியின் மத்திய சென்னை முன்னாள் மாவட்ட தலைவர் இரா. செல்வம் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதனையடுத்து மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட திநகர் ராஜம்மாள் தெருவைச் சேர்ந்த RBVS மணியனை (76) போலீசார் கைது செய்தனர். விசாரணைக்குப்பின் கைது செய்யப்பட்ட ஆர்பிவிஎஸ் மணியன் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது மணியனை நீதிமன்ற காவலில் எடுப்பதற்கான மனுவை அரசு வழக்கறிஞர் எம்.சுதாகர் தாக்கல் செய்தார். பின்னர், மணியனிடம் உங்கள் மீதான புகாருக்கு என்ன பதில் கூற விரும்புகிறீர்கள் என நீதிபதி கேள்வி எழுப்பினார். நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. எனக்கு சிறுநீர் தொற்று, ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளிட்ட உடல் உபாதைகள் உள்ளது, எனது உடல் நிலையை கருத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். இதனையடுத்து, வரும் 27ம் தேதி வரை மணியனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். மணியனின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜ் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த நீதிபதி அல்லி கோரிக்கை பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.