தூத்துக்குடி மாவட்டத்தில் பழைய செல்போன்களை விற்கும் மற்றும் வாங்கும் கடைக்காரர்கள் சில முக்கிய விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று எஸ்பி பாலாஜி சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் செல்போன் திருடுபவர்கள் அதை தங்களுடையது என பழைய செல்போன் விற்பனையாளர்களிடம் (Second Hand Mobile Phone) விலைக்கு விற்று வருகின்றனர். அதேபோல அவர்கள் செல்போன்களை யாரிடம் விற்கின்றனர் என்ற எவ்வித விபரமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் திருட்டு செல்போன்கள் மிக எளிதில் மார்க்கெட்டில் விலை போய் விடுகின்றன. ஆகவே பழைய செல்போன் வாங்குவர்கள், விற்பவர்கள் தங்களிடம் செல்போன்களை விற்பனை செய்ய வருபவர்களிடமும், வாங்க வருபவர்களிடமும், அவர்களது புகைப்படம் மற்றும் முகவரி ஆகியவற்றை பெற்று, அவர்களது அடையாள அட்டையான ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை ஆகியவற்றோடு ஒத்துப்போகிறதா என சரிபார்க்க வேண்டும்.
அதனுடன் அனைத்து நகல்களையும் வாங்கிக் கொண்டு, அவர்களது செல்போன் எண்ணையும் பெற்று, அது அவர்களுடையதுதானா? என்று சரிபார்க்க வேண்டும். மேலும் அவர்கள் என்ன தொழில் செய்கிறார்கள் என்ற விபரங்களையும் பெற்றும் ஒரு பதிவேட்டில் பதிவு செய்து அவர்களிடம் கையொப்பம் பெற்றுக்கொண்டு செல்போன்களை வாங்கவோ, விற்பனை செய்யவோ வேண்டும்.
மேலும் நாம் பயன்படுத்தும் செல்போன்களில் நமது குடும்ப புகைப்படங்கள், வங்கிக்கணக்கு உள்ளிட்ட பல முக்கிய தகவல்கள் போன்றவற்றை சேமித்து வைத்திருப்போம், அவற்றை விற்பனை செய்யும்போது அவற்றை அழித்து விட்டு விற்பனை செய்தாலும், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அவற்றை மீட்டெடுக்கும் அபாயம் உள்ளது. அதனால் இந்த விவரங்களை கவனத்தில் கொண்டு, பழைய செல்போன்களை விற்பனை செய்யும் போது முழுமையாக பார்மெட் (Format) செய்து விற்பனை செய்ய வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.