சென்னை, முகப்பேர் பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்திய நபரை போலீசார் கைது செய்து 5 பெண்களை மீட்டனர்.

சென்னையில் வேலை தேடி கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம் பெண்களிடம் தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி, அவர்களை அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தி, பணம் சம்பாதிக்கும் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டதின் பேரில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு துணை ஆணையாளர் வனிதா மேற்பார்வையில், விபச்சார தடுப்புப் பிரிவு உதவி ஆணையாளர் ராஜலட்சுமி தலைமையில், விபச்சார தடுப்புப்பிரிவு (ITPU) காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் ரகசியமாக கண்காணித்து மேற்படி குற்றச் செயல்களில் ஈடுபடும் விபச்சார தரகர்களை கைது செய்து, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, விபச்சார தடுப்புப் பிரிவு-1 (Immoral Traffic Prevention Unit, ITPU-1) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று (01.11.2023) காலை, முகப்பேர், வளையாபதி தெருவில் உள்ள ஒரு வீட்டை கண்காணித்தபோது, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது.
அதன்பேரில், பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல் குழுவினர் மேற்படி வீட்டில் சோதனைகள் மேற்கொண்டு, பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய சமீர் ரஹீக், வ/29, த/பெ.முகமது சாதிக், பஜார் மெயின் ரோடு, ராம் நகர், சீனிவாசன் நகர், மடிப்பாக்கம், சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், மேற்படி இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வைத்திருந்த 5 பெண்கள் மீட்கப்பட்டனர். விசாரணையில் எதிரி சமீர் ரஹீக் மேற்படி வீட்டை வாடகைக்கு எடுத்து, பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட எதிரி சமீர் ரஹீக் விசாரணைக்குப் பின்னர் நேற்று (01.11.2023) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட 5 பெண்களும் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.