சென்னை நகரில் இஸ்லாமியர்கள் கலந்து கொண்ட சமத்துவ விநாயகர் வழிபாட்டு நிகழ்ச்சி

151

சென்னை, ராயப்பேட்டை மற்றும் ஆர்.கே.நகர் பகுதிகளில் காவல்துறை ஒருங்கிணைப்புடன் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி சமத்துவ விநாயகர் வழிபாடு நடத்தப்பட்டது.

இன்று (24.09.2023) மதியம் ராயப்பேட்டை, சீனிவாச பெருமாள் சன்னதி முதல் தெருவில் வைத்துள்ள விநாயகர் சிலைகளை முறையாக கடலில் கரைக்க எடுத்து செல்லும் நிகழ்ச்சியை முன்னிட்டு, காவல் துறை ஒருங்கிணைப்புடன் மதநல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில், மயிலாப்பூர் காவல் துணை ஆணையாளர் ரஜத் சதூர்வேதி தலைமையில் சமத்துவ விநாயகர் பூஜை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், அப்பகுதியைச் சேர்ந்த இந்து, முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ மதத்தினரும், காவல் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பூஜை வழிபாட்டில் கலந்து கொண்டனர். மேலும் ஆர்.கே.நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நேதாஜி நகர் 3வது தெருவில் காவல் துறை ஒருங்கிணைப்புடன் மதநல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற சமத்துவ பிள்ளையார் பூஜையில், வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையாளர் சக்திவேல், தலைமையில், அனைத்து மதத்தினரும், காவல் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.