நடிக்க வாய்ப்பு தருவதாக பொய்யான வாக்குறுதி அளித்து மோசடியில் ஈடுபட்ட 2 நபர்கள் கைது

154

சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த ஒரு நபர் பிரபல திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் சென்னை காவல் ஆணையாளர் அவர்களிடம் 01.08.2023 அன்று ஒரு புகார் மனு அளிக்கப்பட்டது. அதில் மோசடி நபர்கள் ‘filmcinemaads’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு அளிப்பதாக பல பதிவுகளை பகிர்ந்துள்ளதாகவும், மோசடி நபர் தான் ஒரு பிரபல திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தில் ஏஜென்டாக பணிபுரிவதாக கூறி 8825884963 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் பலரை தொடர்பு கொண்டு நடிக்க வாய்ப்பு தருவதாக ஏமாற்றி UPI மூலம் பணம் பெற்று மோசடி செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. புலன் விசாரணையில் மோசடி நபரின் Paytm கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் வங்கி கணக்குகளுடன் தொடர்புடைய மொபைல் எண் விவரங்கள், முகவரிகள் மற்றும் அடையாள விவரங்கள் போன்றவை சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. மோசடி வங்கி கணக்கிலிருந்து செய்யப்பட்ட பண பரிவர்த்தனைகளும் ஆய்வுக்கு உட்படுத்தபட்டு, ஏடிஎம் பண பரிவர்த்தனை காட்சிகள் சம்பந்தப்பட்ட வங்கியிடமிருந்து பெறப்பட்டன. மேலும் மோசடி நபர் பயன்படுத்திய தொலைபேசி எண்ணின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்ததில் அது திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் கலியபெருமாள் என்பவருக்கு சொந்தமானது எனவும், மோசடி நபர்கள் கடலூரில் இருப்பதும்
தெரியவந்தது.

அதனையடுத்து தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு புலன் விசாரணை மேற்கொண்டதில் 22.09.2023 அன்று சுதாகரன் (வயது 26) மற்றும் புகழேந்தி (20) ஆகிய இருவரையும் போலீசார் கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் வைத்து கைது செய்தனர். இக்குற்ற செயலுக்காக பயன்படுத்தப்பட்ட 3 செல்போன்கள் மற்றும் 1 லேப்டாப்
ஆகியவை அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டன. விசாரணையில் குற்றவாளிகளுக்கு திருப்பூர், அடையாறு மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் மேலும் மூன்று வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி 40க்கும் மேற்பட்டவர்களை இவர்கள் ஏமாற்றியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் குற்ற செயலுக்காக பயன்படுத்திய 15 சிம் கார்டுகளில் 13 சிம் கார்டுகளை அழித்துள்ளனர். மேலும் இந்த கும்பல் 2022ஆம் ஆண்டு முதல் மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

எனவே, பிரபல நிறுவனங்களில் நடிக்க வாய்ப்பு என்ற பெயரில் வரும் இதுபோன்ற ஆன்லைன் மோசடிகளை நம்பி ஏமாறாமல் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏதேனும் புகார்கள் அல்லது சந்தேகங்கள்
இருப்பின் 1930 என்ற எண்ணை அணுகுமாறும், ஆன்லைனில் www.cybercrime.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் புகார் அளிக்குமாறும் பொதுமக்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் கேட்டுக் கொண்டுள்ளார்.