ரூ. 1.88 கோடி மோசடி: விளம்பர நிறுவன முன்னாள் மேலாளர் கைது

185

சென்னை, ஏழுகிணறு பகுதியில் Sunlight World என்ற பெயரில் நிறுவனம் நடத்திவருபவர் பீர் அனீஸ் ராஜா (47). இவரிடம் பம்மலைச் சேர்ந்த விஜயராகவன் என்பவர் அறிமுகமாகி தான் ரேடியோ சிட்டியில் விளம்பர பிரிவில் மேலாளராக வேலை பார்த்து வருவதாகவும் தான் வேலை பார்க்கும் ரேடியோ சிட்டி F.M. மூலம் விளம்பரம் செய்ய நிறைய ஆர்டர்கள் உள்ளதாகவும் தெரிவித்தார். அந்த ஆர்டர்களுக்கான தொகையை ரேடியோ சிட்டியில் முன்கூட்டியே செலுத்தி விளம்பரம் செய்வதற்காக பணம் முதலீடு செய்தால் அந்த விளம்பரம் ஒலிபரப்பானவுடன் வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்தை லாபத் தொகையுடன் திருப்பிக் கொடுப்பதாக விஜயராகவன் கூறியுள்ளார். அதன் பெயரில் அனீஸ்ராஜாவை Mantra Media என்ற விளம்பர நிறுவனத்தை விஜயராகவன் ஆரம்பிக்க வைத்துள்ளார். அந்த நிறுவனத்தின் அனைத்து வரவு, செலவுகளையும் விஜயராகவன் கவனித்து வந்துள்ளார்.

அதன்படி அனீஸ்ராஜாவிடம் இருந்து முதலீடாக ரூ. 1.88 கோடி வரை தன் பெயரில் பெற்றுக்கொண்டு அவருக்கு தெரியாமல் அதே பெயரில் தனியாக இன்னொரு நிறுவனத்தை ஆரம்பித்து, வாடிக்கையாளர்கள் தரும் விளம்பர பணத்தை தானே எடுத்துக்கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக அனீஸ்ராஜா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு, ஆவண மோசடி பிரிவு-II-ல் (EDF-II) வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மத்திய குற்றப்பிரிவு, கூடுதல் ஆணையாளர் மகேஸ்வரி ஆலோசனையின்பேரில், காவல் ஆய்வாளர் சுமதி தலைமையிலான தனிப்படையினர் விஜயராகவனை பல்லாவரத்தில் வைத்து நேற்று கைது செய்தனர். பின்பு விஜயராகவன் எழும்பூர் CCB & CBCID சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.