ஊட்டியில் போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கைவிலங்கு போட்டு அழைத்துச் சென்றதாக வந்த செய்தி தவறானது என நீலகிரி மாவட்ட எஸ்பி சார்பில் விளக்கம் அளித்துள்ளது.
அது தொடர்பாக நீலகிரி எஸ்பி வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: ‘‘கடந்த 22.11.2023 ஆம் தேதி ஆங்கில பத்திரிகை ஒன்றின் நீலகிரி பதிப்பில் “POCSO CASE VICTIM GIRL HANDCUFFED IN OOTY” என்ற தலைப்பில் செய்தி வெளியிடப் பட்டது. உதகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் Child Marriage Act on 02.11.2023 என்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 07.11.2023 அன்று பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை கோத்தகிரி நீதிமன்ற நடுவரிடம் சட்டப் பிரிவு 164ன்படி வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டி உதகை அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் காவலர் அழைத்து சென்றார். அது தொடர்பாக 15.11.2023 அன்று பாதிக்கப்பட்ட சிறுமியின் வளர்ப்பு தாய் பாதிக்கப்பட்ட சிறுமியை போலீசார் கை விலங்கிட்டு அழைத்து சென்றதாக மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார். அது தொடர்பாக நீலகிரி டிஎஸ்பி யசோதா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் நடத்திய விசாரணையில் தொடர்புடைய சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து அதில் கைவிலங்கு போடவில்லை என்பதை உறுதி செய்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியையும் அவர் விசாரித்த போது தனக்கு கைவிலங்கு போடப்படவில்லை என சிறுமி தெரிவித்துள்ளார். ஆகையினால் பத்திரிகையில் வந்த செய்தி உண்மையில்லை என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.