சென்னை, புட்லூர் மின்சார ரயிலில் பாசிமணி விற்பவரை கழுத்தில் பாட்டிலால் குத்திக் கொலை செய்த வாலிபரை ரயில்வே போலீசார் உடனடியாக கைது செய்தனர்.

திருவள்ளூர், பெரியகுப்பம், துளசி தியேட்டர் எதிரில் உள்ள பாலத்தின் கீழ் தங்கியிருந்து ரயில்களில் பாசிமணி விற்று வருபவர் இந்திரா (வயது- 28). இவரது கணவர் பார்த்திபன் @ கார்த்தி. கடந்த இரண்டு நாட்களாக வியாபாரம் முடித்து விட்டு தனது கணவர் பார்த்திபன் மற்றும் உறவினர்களுடன் புட்லுர் ரயில் நிலைய 2வது பிளாட்பார்மில் தங்கி வந்துள்ளனர். அதே போன்று நேற்று 21.11.2023-ம் தேதி இந்திரா மற்றும் அவரது கணவர் பார்த்திபன் ஆகியோர் பாசிமணி வியாபாரத்தை முடித்துவிட்டு இரவு 8.30 மணிக்கு புட்லூர் ரயில் நிலைய 2வது பிளாட்பார்மில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது இவர்களுக்கு அருகே ஏற்கனவே தெரிந்த சென்னை, எண்ணூர், கத்திவாக்கத்தைச் சேர்ந்த தமிழரசன் (வயது 29) என்பவர் அவரது மனைவியுடன் போர்வை போத்திக்கொண்டு அங்கு படுத்துக் கொண்டிருந்தார். அப்போது ரயில் வண்டியில் இருந்து இறங்கி செல்லும் பயணிகள் சிலர் தமிழரசன் படுத்திருந்த போர்வையை காலால் மிதித்து சென்றுள்ளனர். அதனால் கோபம் அடைந்த தமிழரசன் ரயில் பயணிகளை அசிங்கமாக அறுவறுக்கதக்க வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் பார்த்திபன் தமிழரசனை கண்டித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாகியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தமிழரசன் கண்ணாடி பாட்டிலை உடைத்து பார்த்திபன் கழுத்தின் இடது பக்கம் அறுத்துவிட்டு மனைவியுடன் சென்னை மார்க்கமாக வந்த மின்சார ரயில் வண்டியில் ஏறி தப்பிச் சென்று விட்டார். கழுத்தில் பலமான காயம் ஏற்பட்டு ரத்தம் அதிகமாக வெளியேறியதால் அங்கிருந்தவர்கள் அவரை ஆட்டோ மூலம் அரசு மருத்துவ மனையில் அட்மிட் செய்தனர். பார்த்திபன் வழியிலேயே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக எழும்பூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ரயில்வே போலீஸ் ஏடிஜிபி வனிதா உத்தரவின் பேரில் எஸ்பி சுகுணாசிங் மேற்பார்வையில் டிஎஸ்பி ரமேஷ் தலைமையில் கொலையாளியைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் சென்னை பீச் ரயில்வே பாதுகாப்பு படை உதவியுடன் அனைத்து ரயில் நிலையங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் எதிரியை தீவிரமாக தேடிவந்த நிலையில் இன்று 22.11.023 ஆம் தேதி செவ்வாய்பேட்டை ரயில் நிலையத்தில் நின்றிருந்த தமிழரசனை கைது செய்தனர்.
அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.