இன்று முதியோர் தினத்தை முன்னிட்டு சென்னை ஜாம்பஜார் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி முதியோர்களை நேரில் சந்தித்து மரியாதை செலுத்தினார்.

சென்னை மயிலாப்பூர் காவல் மாவட்ட எல்லையில் உள்ள ஜாம்பஜார் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ராஜேஸ்வரி. இவர் காவல் ஆய்வாளர் மட்டுமின்றி சமூக பிரச்சினைகளை கையில் எடுத்து தாமாகவே முன்வந்து அவற்றை சரிசெய்ய முயற்சி செய்யும் நல்லுள்ளம் படைத்தவர். கொரோனா சமயத்தில் சாலை ஓரங்களில் அனாதையாக படுத்துறங்கும் நபர்களுக்கு உணவளித்து பெரும் சேவை ஆற்றிய பெருமை இவரையே சாரும்.
எப்போதும் அனாதைகளுக்கு உதவும் உள்ளம் படைத்த இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி இன்று முதியோர் தினத்தை முன்னிட்டு ஜாம்பஜார் காவல் எல்லையில் உள்ள முதியோர் இல்லத்துக்கு சென்றார். அங்கு தங்கியுள்ள வயதான ஆண், பெண் முதியவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நலம் விசாரித்து புத்தாடை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவர்களுக்கு பழங்கள் கொடுத்து மகிழ்வித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டாடினார். இன்ஸ்பெக்டரின் இந்த செயல் முதியோர்களை மிகவும் நெகிழ வைத்தது.