9 மூத்த குடிமக்கள் வீட்டுக்கு நேரில் சென்று விசாரணை நடத்த உத்தரவு: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நடவடிக்கை
சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் கடந்த டிசம்பர் மாதம் காவல் ஆணையாளரை சந்தித்து புகார் மனுகொடுத்த 9 மூத்த குடிமக்களின் மனுக்கள் மீது நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் இன்று (03.01.2024) காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் முகாமில், பொதுமக்களின் 28 புகார் மனுக்களை பெற்று, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதில், அயனாவரத்தைச் சேர்ந்த 82 வயதான கிளாடிஸ் சிங் மற்றும் தரமணியைச் சேர்ந்த 82 வயதான தேவராஜ் ஆகிய மூத்த குடிமக்களின் மனுக்கள் மீது முறையே காவல் துணை ஆணையாளர்கள் கீழ்பாக்கம் மற்றும் புனித தோமையர்மலை ஆகியோர் மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

மேலும், 35 காவல் ஆளிநர்களின் துறை ரீதியான மனுக்களை பெற்று உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கடந்த டிசம்பர் -2023 மாதம், காவல் ஆணையரகத்தில் புதன்கிழமைகளில் நடந்த பொதுமக்கள் குறைதீர் முகாம்களில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் 90 மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதில் 9 மூத்த குடிமகன்களின் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துணை ஆணையாளர் நேரில் சென்று விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டு, துணை ஆணையாளர்கள் மூத்த குடிமகன்களின் வீடுகளுக்கு சென்று விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதில், சென்னை, சூளை, ஆவடி சீனிவாசன் தெருவில் வசித்து வரும் 83 வயது ராஜாபாதர் என்ற மூத்தகுடி மகன் கடந்த 13.12.2023 அன்று காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரை நேரில் சந்தித்து, தனது வீட்டில் வாடகைக்கு இருக்கும் முரளிதரன் என்ற நபர் வாடகை தராமலும் வீட்டை காலி செய்யாமலும் வீட்டை பூட்டி சென்று விட்டதாகவும், நடவடிக்கை எடுக்கும்படியும் புகார் மனு கொடுத்தார். இந்த மனு மீது விரைந்து விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கும்படியும், மூத்தகுடிமகன் வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொள்ளவும், புளியந்தோப்பு காவல் துணை ஆணையாளருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில், புளியந்தோப்பு, துணை ஆணையாளர் ஈஸ்வரன் ஓட்டேரி காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்களுடன் மூத்தகுடிமகன் ராஜாபாதர் வீட்டிற்கு நேரில் சென்று கனிவாக விசாரணை செய்தார். அந்த வீட்டில் 2020ம் ஆண்டு முதல் வாடகைக்கு இருந்து வரும் முரளிதரன் என்பவர் சரிவர மாத வாடகை செலுத்தாமல், கடந்த 2 ஆண்டுகளாக வீட்டை பூட்டிச் சென்று சென்றதும் தெரியவந்தது. அதனையடுத்து இந்த வழக்கு சிவில் சம்பந்தப்பட்டது என்பதால், நீதிமன்றம் சென்று வழக்கு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டார். அதன்பேரில், மூத்தகுடிமகன் ராஜாபாதர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்வதாக எழுத்து பூர்வமாக தெரிவித்தார். மேலும், மீதமுள்ள 8 மூத்த குடிமக்களின் புகார் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துணை ஆணையாளர்கள் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
மூத்த குடிமக்கள் கொடுக்கும் புகார் மனுக்கள் மீது கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் துணை ஆணையாளர் தலைமையிலான காவல் அதிகாரிகள் மூத்த குடிமக்கள் வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருவதுடன், அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும், அவசர உதவி தேவையெனில் எப்பொழுதும் காவல்துறையை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்து, அவர்களுக்கு காவல் அதிகாரிகள் மற்றும் உதவி மைய எண்கள் கொடுக்கப்பட்டு வருகிறது.
இது தவிர கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் டிசம்பர் -2023 மாதம் புதன்கிழமைகளில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் முகாமிலும் 106 காவல் ஆளிநர்களின் மனுக்களை பெற்று அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.