தனியார் நிறுவனத்தில் திருடிய நபர் கைது: ரூ. 41. 88 லட்சம் பறிமுதல்

185

சென்னை, கீழ்ப்பாக்கம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணம் திருடிய நபரை கைது செய்த போலீசார் ரூ. 41.88 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

சென்னை, சேத்துப்பட்டு, ஹாரிங்டன் சாலையைச் சேர்ந்தவர் ஜேக்கப் (67). கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில், பேனா மொத்த விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 21.10.2023 அன்று மேற்படி நிறுவனத்தில் உள்ள அவரது அறையை பூட்டி விட்டு 24.10.2023 அன்று காலை அவரது அலுவலகம் வந்து அவரது அறையை திறந்து பார்த்தபோது, அவரது மேஜை டிராயர் உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த பணம் ரூ. 41 லட்சம் திருடு போயிருந்தது. இது குறித்து ஜேக்கப் கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

கீழ்ப்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை செய்து, மேற்படி திருட்டில் ஈடுபட்ட தண்டையார்பேட்டையைச் சேர்நத சக்திவேல் (57) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து பணம் ரூ. 41,88,000- பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், சக்திவேல். பழைய இரும்பு பொருட்களை வாங்கும் காயலான் கடை நடத்தி வந்துள்ளார். ஜேக்கப்பின் நிறுவனத்தில் பழைய மற்றும் இரும்பு பொருட்களை விலைக்கு வாங்கி வந்துள்ளதும், இந்நிலையில் கடந்த 22.10.2023 அன்று இரவு சக்திவேல், ஜேக்கப்பின் நிறுவனத்திற்கு சென்றுள்ளார். அப்போது அலுவலகம் பூட்டியிருந்ததால், ஜன்னல் வழியாக அலுவலகத்தில் நுழைந்து, அங்கிருந்த மேஜை டிராயரை உடைத்து, அதில் வைத்திருந்த பணத்தை திருடிக் கொண்டு சென்றதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட எதிரி சக்திவேல், விசாரணைக்குப் பின்னர் இன்று (31.10.2023) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
******