சென்னை நகரில் 7 நாட்களில் 456 கிலோ குட்கா பறிமுதல்: 48 பேர் கைது

165

கடந்த 7 நாட்கள் குட்கா, மாவா புகையிலை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 48 நபர்களை போலீசார் கைது செய்தனர். 456.9 கிலோ குட்கா புகையிலை பொருட்கள், மற்றும் 743.9 கிலோ மாவா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் மூலம் ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ (DABToP – Drive Against Banned Tobacco Products) என்ற சிறப்பு சோதனை மேற்கொண்டு, குட்கா மற்றும் மாவா புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 25.10.2023 முதல் 31.10.2023 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 48 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 456.9 கிலோ குட்கா புகையிலை பொருட்கள், 743.9 கிலோ மாவா, பணம் ரூ.28,720-, 1 செல்போன் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதால், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் உள்பட சட்டவிரோத பொருட்களை கடத்தி வருபவர்கள், பதுக்கி வைப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.