வீட்டின் கிரில்­கேட்டை உடைத்து 29 பவுன் தங்­க­ நா­ண­யத்தை திரு­டிய நபர் கைது: 24 மணி நேரத்தில் போலீசார் அதி­ர­டி

167

சென்னை, பழவந்தாங்கலில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய நபர் 24 மணி நேரத்தில் கைது செய்து 29 பவுன் தங்க நாணயங்கள், ரூ.1 லட்சம் ரொக்­கம் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்­யப்­பட்­டன.

சென்னை, நங்கநல்லூர், 5வது மெயின் ரோடு, நித்யா பிளாட்ஸ்சை் சேர்ந்­தவர் ஜனார்த்தனன் (42). 27.12.2024 அன்று மதியம் வீட்டை பூட்டிவிட்டு அவரது மனைவியுடன் உறவினர் இறப்பு சடங்கிற்கு சென்றார். இரவு திரும்ப வந்து பார்த்த போது வீட்டின் கிரில் கேட் உடைந்து கிடந்­தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 29 சவரன் எடை கொண்ட 29 தங்க நாணயங்கள் தலா 8 கிராம் எடை கொண்டவை மற்றும் பணம் ரூ. 1 லட்சம் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஜனார்த்தனன் பழவந்தாங்கல் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப் பதிவு சம்பவ இடத்தில் உள்ள சிசி­டிவி கேம­ராக்­களை ஆய்வு செய்து திருட்டில் ஈடு­பட்ட ராஜா அண்­ணா­ம­லை­பு­ரத்­தைச் சேர்ந்த ஆனந்த் (49) என்பவரை நேற்று (28.12.2024) கைது செய்தனர். அவரிடமிருந்து 29 சவரன் எடை கொண்ட 29 தங்க நாணயங்கள், பணம் ரூ.1 லட்சம் மீட்கப்பட்டது. மேலும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் மற்றும் 1 கௌபார் (சிறிய கடப்பாரை) ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் சம்பவத்தன்று எதிரி ஆனந்த் இருசக்கர வாகனத்தில் நங்கநல்லூர் பகுதியில் முன்னரே நோட்டமிட்டு, புகார்தாரர் வீட்டின் பூட்டை உடைத்து திருடியதும், இவர் மீது ஏற்கனவே திண்டுக்கல் மாவட்ட காவல் நிலையத்தில் 3 திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட எதிரி ஆனந்த் விசாரணைக்குப் பின்னர் நேற்று (28.12.2024) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.