2021ம் ஆண்டு எஸ்பிளனேடு பகுதியில் ஒருவரை கொலை செய்த வழக்கில் 3 குற்றவாளிகளுக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

சென்னை, பிராட்வே பகுதியில் வசித்து வந்த தங்கமணி (22) தனது நண்பர் முத்து என்பவருடன் கடந்த 09.01.2021 அன்று அரண்மனைக்காரன் தெரு, மூக்கர் நல்ல முத்து தெரு சந்திப்பில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் தங்க மணியிடம் முன்விரோதம் காரணமாக தகராறு செய்து பீர் பாட்டிலால் தலையில் தாக்கி கொலை செய்து விட்டு தப்பியோடினர். இதுகுறித்து முத்து எஸ்பிளனேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை வழக்கில் தொடர்புடைய கொடுங்கையூர் பாலாஜி (20), அண்ணநகர் ஸ்ரீநாத், (20), கொருக்குப்பேட்டை ஏலையா, 20 ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள 1வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிமன்ற வழக்கு விசாரணை முடிவடைந்து இவ்வழக்கில் நேற்று (03.10.2023) தீர்ப்பு வழங்கப்பட்டது.
கொலை வழக்கில் எதிரிகள் பாலாஜி, ஸ்ரீநாத், ஏலையா ஆகிய மூவர் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளிகளுக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ. 3,500- அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். மேற்படி வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தந்த எஸ்பிளனேடு காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் குழுவினரை உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்.