சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி தினகரன் மேற்பார்வையிலான தனிப்படையினரின் முயற்சியால் ரூ. 2 கோடி மதிப்பிலான விநாயகர் மற்றும் மாணிக்கவாசகர் ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டு 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐஜி தினகரன்
விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியைச் சேர்ந்த பாலமுருகன் (வயது 36) என்பவர் பழமையான மாணிக்கவாசகர் ஐம்பொன் சிலையை 2 கோடிக்கு விற்க முயற்சி செய்வதாக சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஏடிஜிபி சைலேஸ்குமார் யாதவ் உத்தரவின் பேரில் ஐஜி தினகரன், எஸ்பி சிவக்குமார் மேற்பார்வையில் சிலை கடத்தல் கும்பலுக்கு சந்தேகம் ஏற்படாத வண்ணம் சிலையை மீட்க அதிரடி செயல் திட்டம் வகுத்தனர். அதனையடுத்து டிஎஸ்பி முத்துராஜா தலைமையில், ஆய்வாளர்கள் ரவீந்திரன், சத்தியபிரபா, உதவி ஆய்வாளர்கள் ராஜேஸ். மதன், ராமசாமி, தலைமைக் காவலர்கள் சக்திவேல், ரீகன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் சிலை வாங்கும் நபர்களை போல புரோக்கர் பாலமுருகனை அணுகச் செய்தனர்.
சிலைக்கடத்தல் ஆசாமிகளின் நம்பிக்கையை பெற தனிப்படையினருக்கு பத்து நாட்களுக்கு மேல் ஆனது. இறுதியாக கடத்தல் ஆசாமிகள் அந்தச் சிலையினை தனிப்படையினருக்கு காட்ட ஒப்புக் கொண்டனர். தனிப்படை அதிகாரிகள் சத்தியபிரியா மற்றும் ராஜேஸ் ஆகியோர் பாலமுருகனை காரியாபட்டியில் சந்தித்து பேசிய போது அந்த மாணிக்கவாசகர் சிலையின் மதிப்பாக ரூ. 2 கோடி முடிவு செய்யப்பட்டது. தனிப்படையினர் குற்றவாளியிடம் மேற்கொண்டு பேச்சுக் கொடுத்த போது இவனது நண்பன் சென்னையை சேர்ந்த பிரபாகரன் என்பவரிடம் மேலும் ஓரு விநாயகர் சிலை இருப்பது தெரிய வந்தது. எனவே அந்த சிலையையும் கைப்பற்றுவதற்காக மேற்கூறிய பாலமுருகனை சென்னைக்கு வந்து அந்த சிலையையும் வாங்கித் தருமாறு கேட்டனர். முதலில் ஒப்புக்கொள்ள மறுத்த பாலமுருகன் கடும் முயற்சிகளுக்கு பின் சென்னை வர ஒப்புக்கொண்டார்.
அந்தத் திட்டத்தின்படி இன்று காலை தனிப்படை உதவி ஆய்வாளர்கள் ராஜேஸ், ராமசாமி ஆகியோர் திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே குறிப்பிட்ட இடத்தில் காத்திருந்தனர். அப்போது பாலமுருகனும் அவனது நண்பர்களான அம்பத்தூரைச் சேர்ந்த பிரபாகரன் (வயது 40), விருதுகநர் மணிகண்டன் (வயது 34) ஆகியோரும் ஒரு பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையோடு அவ்விடத்திற்கு வந்தனர். பின்பு மேற்கூறிய மூன்று குற்றவாளிகளும் தனிப்படையினரும் ஒரு மறைவான இடத்தில் பேச்சுவார்த்தை நடத்திய போது அந்த விநாயகர் சிலைக்கு ரூபாய் 4 கோடி என மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டது. அப்போது காவல் துணை கண்காணிப்பாளர் திரு. முத்துராஜா தனது தனிப்படை காவலர்களுடன் வந்து அந்த மூன்று நபர்களையும் சுற்றி வளைத்து பிடித்து அவர்களிடமிருந்து . மாணிக்கவாசகர் ஐம்பொன் சிலை, விநாயகர் ஐம்பொன் சிலை -ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில் இரு சிலைகளும் திருவண்ணாமலை, செய்யார் அருகே உள்ள ஏதேனும் ஒரு கோவிலில் இருந்து திருடப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. மேலும் இவ்விரு சிலைகளும் 18 ஆம் நுாற்றாண்டை சேர்ந்தது என்பதும் இவற்றின் சர்வதேச சந்தை மதிப்பு ரூபாய் 2 கோடிக்கு மேல் இருக்கலாம் என்பதும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிலைகளை சாதுர்யமாக மீட்ட ஐஜி தினகரன் மேற்பார்வையிலான தனிப்படையினரின் சிறப்பான பணியை ஏடிஜிபி சைலேஸ் குமார் யாதவ் வெகுவாக பாராட்டினார்.