2015ம் ஆண்டு கொலை வழக்கில் குற்றவாளிக்கு கடுங்காவல் ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வரதய்யன் (எ) வரதன் (67) மற்றும் ராஜமாணிக்கம் (41) ஆகிய இருவரும், சென்னை, கொத்தவால்சாவடி பகுதியில் கூலி வேலை செய்து வந்துள்ளனர். இருவரும் அடிக்கடி மதுபோதையில் தகராறு செய்து கொள்ளும் நிலையில், 09.03.2015 அன்று இரவு வரதய்யன் மற்றும் ராஜமாணிக்கம் மது அருந்தியபோது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்பொழுது, ராஜமாணிக்கம் அருகிலிருந்த இரும்பு கம்பியால் வரதய்யனை தாக்கிவிட்டு தப்பிச் சென்றார். ரத்தக் காயமடைந்த வரதய்யன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 10.03.2015 அன்று இறந்துவிட்டார். இதுகுறித்து கொத்தவால்சாவடி காவல் நிலையத்தில் கொலை பிரிவில் வழக்குப் பதிவு செய்து ராஜமாணிக்கத்தை போலீசார் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர்.
இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலுள்ள 7வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிமன்ற வழக்கு விசாரணை முடிவடைந்து இவ்வழக்கில் நேற்று (12.12.2023) தீர்ப்பு வழங்கப்பட்டது. எதிரி ராஜமாணிக்கம் மீது குற்றம் நிருபிக்கப்பட்டதால், குற்றவாளி ராஜமாணிக்கத்திற்கு கடுங்காவல் ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ. 500- அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தந்த கொத்தவால்சாவடி காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் குழுவினரை உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்,