சென்னை நகரில் கடந்த 7 நாட்களில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த 24 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை நகரில் குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் தொடர் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த ஜனவரி முதல் இம்மாதம் 29ம் தேதி வரை சென்னை பெருநகரில், கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 434 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 104 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 77 குற்றவாளிகள், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 4 குற்றவாளிகள், பாலியல் தொழில் நடத்திய 13 பேர், பெண்களை மானபங்கம் படுத்திய 4 குற்றவாளிகள், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 2 குற்றவாளிகள் மற்றும் உணவு பொருள் கடத்தல் பிரிவில் 1 குற்றவாளி என மொத்தம் 639 குற்றவாளிகள் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு காவல் சட்டம் மற்றம் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 23ம் தேதி முதல் நேற்று வரையிலான ஒரு வாரத்தில் 24 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
குற்றவாளிகள் கமால், 47, என்பவர் கடந்த 29.10.2023 அன்று செந்தில்குமார் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக திருவான்மியூர் காவல் நிலையத்திலும், குணசேகரன் (எ) அறுப்புகுணா, 23 என்பவர் கடந்த 06.11.2023 அன்று வழிப்பறி செய்த குற்றத்திற்காக புழல் காவல் நிலையத்திலும், பிரகாஷ் (எ) ஸ்டீபன், 23, சந்தோஷ் (எ) தவக்களை சந்தோஷ், 25 சென்னை ஆகிய இருவரும் சேர்ந்து கடந்த 06.11.2023 அன்று செல்போன் பறிப்பில் ஈடுபட்ட குற்றத்திற்காக அமைந்தகரை காவல் நிலையத்திலும் ஏழுமலை, 28, அருண்குமார், 25, ஆகிய இருவரும் சேர்ந்து கடந்த 09.11.2023 அன்று வழிப்பறி செய்த குற்றத்திற்காக, மெரினா காவல் நிலையத்திலும், வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டு குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.