சிங்கப்பூரில் வேலை வாங்கித்தருவதாக ரூ. 42 லட்சம் மோசடி செய்த நபர் கைது

144

சிங்கப்பூர் கம்பெனியில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 42 லட்சம்- பணத்தை பெற்று மோசடி செய்த நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு, கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சந்திர ராஜ், 59 சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோரிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில், ‘‘எனது மகன் விஷேஷ் Quikr.Com-ல் வேலை தேடி வந்தார். இந்நிலையில் அதில் பேசிய பாலமுருகன் என்பவர் என் மகனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிங்கப்பூரில் INTERTEK என்ற கம்பெனியில் வேலை உள்ளதாக தெரிவித்தார். INTER TEK என்ற கம்பெனியில் அவருக்கு தெரிந்த H.R. சுகன்யா என்பவர் வேலை செய்வதாகவும், அவர் மூலம் தான் வேலைக்கு செல்ல இருப்பதாகவும், அதோடு அந்த கம்பெனிக்கு இன்னும் 5 பேர் வேலைக்கு தேவைப்படுவதால், என் மகனுக்கு வேலை பெற்று தருவதாக ஏமாற்றி வங்கி கணக்கு மூலமாக மொத்தம் ரூ. 42,40,000/- பணத்தை பெற்றுக் கொண்டார். ஆனால் போலியான பணி நியமன ஆணைகளை மெயில் மூலமாக அனுப்பி ஏமாற்றிவிட்டு மேற்படி பாலமுருகன் தலைமறைவாகிவிட்டார். அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த புகார் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் மகேஷ்வரி மேற்பார்வையில் வேலை வாய்ப்பு மோசடி புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் ஜினா மேற்கொண்ட புலன் விசாரணையில் எதிரி பாலமுருகன், 31, என்பவர் சென்னை போரூரைச் சேர்ந்தவர் என்பதும் சிங்கப்பூரில் INTER TEK என்ற கம்பெனியில் வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை பெற்று கொண்டு போலியான பணி நியமன ஆணைகளை மெயில் மூலமாக அனுப்பி ஏமாற்றியது உண்மை என தெரியவந்ததது. அதனையடுத்து தலைமறைவாக இருந்து பாலமுருகனை போலீசார் கைது செய்தனர்.

மேலும் பாலமுருகன் பல நபர்களை ஏமாற்றி பணம் பெற்றுள்ளார் என்றும், இரண்டு வழக்குகளில் கோயம்புத்தூர், மற்றும் அருப்புக்கோட்டையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட பாலமுருகன் நேற்று (05.08.2023) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். சிறந்த முறையில் புலனாய்வு செய்து எதிரியை கைது செய்த காவல் ஆய்வாளர் ரெஜினா மற்றும் காவல் குழுவினரை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் வெகுவாக பாராட்டினார். இது போன்ற Online வேலை வாய்ப்பு தளத்தை பார்த்து ஏமாற்றும் நபர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாறவேண்டாம் என்று கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.