மும்பை போலீஸ் எனக் கூறி மிரட்டி, ஆன்லைன் மூலம் பணத்தை அபகரித்த 5 நபர்களை போலீசார் கைது செய்து 1 லேப்டாப், 2 கணினி மற்றும் 2 செல்போன்ள் பறிமுதல் செய்தனர்.

சென்னை, கொளத்தூர், திருப்பதி நகரைச்சேர்ந்தவர் வேல்முருகன் (41). தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 01.04.2024 அன்று வேல்முருகனை செல்போனில் தொடர்பு கொண்ட ஒரு நபர் தான் மும்பை, கிளையிலுள்ள Fedex கொரியர் நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும், வேல்முருகன் மும்பையிலிருந்து தைவானுக்கு அனுப்பிய பார்சலில் 1 லேப்டாப் பணம் ரூ. 35,000 மற்றும் போதைப் பொருட்கள் உள்ளதாகவும், மும்பை போலீஸ் அவரிடம் விசாரணை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மற்றொரு நபர் பேசியபோது, தான் மும்பை போலீஸ் பேசுவதாகவும், நீங்கள் போதைப்பொருட்கள் கொண்ட பார்சலை அனுப்பியுள்ளதால், உங்களை கைது செய்ய வருவதாகவும் மிரட்டியுள்ளார். பின்னர் அந்த நபர் வேல்முருகனிடம் நாங்கள் சொல்லும் வங்கி கணக்குக்கு பணத்தை அனுப்பினால், நாங்கள் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி விசாரணை செய்கிறோம் எனக்கூறியுள்ளனர்.
வேல்முருகன் அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு பணம் ரு. 49,324- அனுப்பியுள்ளார். பின்னர் வேல்முருகன் வங்கிக்கு சென்று விசாரணை செய்தபோது, யாரோ மர்ம நபர்கள் வேல்முருகனை மிரட்டி, ஆன்லைனில் பணம் பறித்துள்ளது தெரியவந்தது.
இது தொடர்பாக வேல்முருகன் கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொளத்தூர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், சைபர் கிரைம் உதவியுடன் மேற்படி மோசடியில் ஈடுபட்ட சென்னை முகலிவாக்கத்தைச் சேர்ந்த முகமது அசாருதீன் (26), கூடுவாஞ்சேரியைச்சேர்ந்த ராஜ்குமார் (56), கொளப்பாக்கம் கணேஷ் ராஜ் (26), கோட்டூர்புரம் எபினேசர் (24), ரத்தினராஜ் (48) ஆகிய 5 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 லேப்டாப், 2 கணினி மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் மேற்படி 5 நபர்களும் போலியாக அலுவலகம் நடத்தி, பொதுமக்களிடம் செல்போனில் மும்பை போலீஸ் போன்று பேசி மிரட்டியும், ஏமாற்றியும் பண மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 5 நபர்களும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.