தனியார் வங்கியில் வேலை வாங்கி தருவதாக நம்ப வைத்து சுமார் ரூ. 2 கோடி பணத்தை பெற்று மோசடி செய்த முன்னாள் கல்லூரி பேராசிரியரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை, மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர் பட்டாபிராமன் (66). மதுரையைச் சேர்ந்த மாறன் என்பவர், பட்டாபிராமின் மகன்களுக்கு தனியார் வங்கியில் உதவி மேலாளர் வேலை வாங்கி தருவதாக கூறி மாறனுக்கு வங்கி மூலமாக மொத்தம் சுமார் ரூ.2 கோடி பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் மாறன் கூறியது போல வேலை வாங்கி தராமலும், பணத்தை திருப்பி கொடுக்காமலும் ஏமாற்றி தலைமறைவாகிவிட்டார். அது தொடர்பாக பட்டாபிராமன் சென்னை நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் செந்தில்குமாரி மேற்பார்வையில், மத்திய குற்றப்பிரிவு, வேலை வாய்ப்பு மோசடி புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் தனலட்சுமி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். பட்டாபிராமனிடம் அவரது மகன்களுக்கு தனியார் வங்கியில் உதவி மேலாளர் வேலை வாங்கி தருவதாக கூறி மாறன் 2016ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை சிறு சிறு தவணைகளாக ரொக்கமாகவும், வங்கி பரிவர்த்தனை மூலமாகவும் என மொத்தம் சுமார் ரூ. 2 கோடி பணத்தை பெற்று கொண்டு ஏமாற்றி மோசடி செய்தது உண்மை என்பது தெரியவந்தது. அதனையடுத்து தனிப்படை போலீசார் மாறனை நேற்று (05.01.2023) கைது செய்தனர். விசாரணையில் மாறன் தனியார் கல்லூரிகளில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட எதிரி மாறன் விசாரணைக்குப் பின்னர் இன்று (06.012023) நீதிமன்றக்கில் ஆஜர்படுத்தப்பட்டு, உத்தரவுப்படி நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
இந்த வழக்கில் திறமையாக புலனாய்வு செய்து எதிரியை கைது செய்த காவல் ஆய்வாளர் தனலட்சுமி, உதவி ஆய்வாளர்கள் சரோஜினி, கிருஷ்ணமூர்த்தி, முதல்நிலை காவலர் கர்ணன் ஆகியோர் உள்ளிட்ட குழுவினரை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் வெகுவாகப் பாராட்டினார். மேலும் பொதுமக்கள் யாரும் இது போன்று அரசுத்துறை மற்றும் தனியார் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறுபவர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என்று கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் வெகுவாக பாராட்டினார்.