மாதவரத்தில் சிக்கிய 320 கிலோ குட்கா: சென்னை மாநகர காவல்துறை நடவடிக்கை

168

சென்னை, மாதவரம் பகுதியில் குட்கா புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 நபர்களை போலீசார் கைது செய்து 320.5 கிலோ குட்கா புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

சென்னை, மாதவரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் நேற்று (05.01.2024) இரவு, மாதவரம், மஞ்சம்பாக்கம் ரவுண்டனா அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்களை மடக்கி விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் அவர்களது இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் பிடிபட்ட நீரஜ் அகர்வால் மற்றும் ரோஷன் சௌத்ரி ஆகியோர் திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ள கிடங்கில் குட்கா புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து, சென்னையில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

அதன்பேரில், சட்டவிரோதமாக குட்கா புகையிலை பாக்கெட்டுகள் எடுத்து வந்த சென்னை கொண்டித்தோப்பைச் சேர்ந்த நீரஜ் அகர்வால் (21), சவுகார்பேட்டையைச் சேர்ந்த ரோஷன் சவுத்ரி (20) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, அத்திப்பட்டில் உள்ள கிடங்கில் மறைத்து வைத்திருந்த மொத்தம் 320.5 கிலோ எடை கொண்ட ஹான்ஸ், கூலிப் குட்கா புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் குற்றச்செயலுக்கு பயன்படுத்திய 1 இரு சக்கரவாகனம் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட எதிரிகள் இருவரும் விசாரணைக்குப் பின்னர் இன்று (06.01.2024) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள மற்ற நபர்களை பிடிக்க காவல் குழுவினர் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.