ரோடு காலியாக இருந்தாலும் வேகமாக செல்லாதீர்கள்: போக்குவரத்து கூடுதல் கமிஷனர் ஆர். சுதாகர் அட்வைஸ்

145

சென்னை நகரில் ரோடு காலியாக இருந்தாலும் வேகமாக செல்லாதீர்கள் என போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் ஆர். சுதாகர் வாகன ஓட்டிகளுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.

சென்னை நகர போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் ஆர். சுதாகர், வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் புதிதாக கொண்டுவரப்பட்ட வேக வரம்பு கட்டுப்பாடுகள் குறித்து இன்று நிருபர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது. ‘‘2023ம் ஆண்டு தமிழ்நாடு மோட்டார் வாகனம் சட்டபடி புதிய வேக கட்டுப்பாடு திட்டத்தின் வேக கட்டுப்பாடு, வாகனங்களுக்கு ஏற்றாற்போல் அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் வேகக்கட்டுப்பாட்டு விதிப்படி 120 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. புதிய வேகக்கட்டுப்பாடு குறித்து தனிக்குழு அமைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. பொதுமக்கள் பாதுகாப்பாக சாலையில் செல்லுவதற்காகவே இந்த புதிய வேக கட்டுப்பாடு அமைக்கப்பட்டுள்ளது. சாலை காலியாக இருந்தாலும் வேகமாக செல்ல வேண்டாம்.

மேலும் தீபாவளி சமயங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை குறைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. வாகனம் வேகமாக செல்லும் பொழுது அதன் கட்டுப்பாடு இழப்பு ஏற்படும். ஆகவே வேகக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். அண்ணா சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட யூ டன் பொருத்தவரை பலரும் பல கருத்துக்களை எழுப்புகிறார்கள். மூன்று கட்ட சோதனையின் பேரில் இந்த யூ திருப்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றும், இந்த புதிய யூ திருப்பங்களால் போக்குவரத்து நெரிசல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய யூ திருப்பங்கள் பற்றி மக்களிடம் கருத்து கேட்டதற்கு X தளத்தில் 70 சதவிகித மக்கள் ஆதரித்துள்ளனர். சாலைகளில் புதிதாக பேருந்துகள் செல்வதற்கு லேன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பேருந்துகளில் படியில் நின்று பயணிப்பதை கட்டுப்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். விதிமுறைகளை யாரும் மீறக்கூடாது. காவல்துறையினரும் மீறுவது குற்றம். மேலும் ஆலந்தூரில் ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கு என தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. புதிதாக பேருந்து நிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மற்ற இடங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது என தெரிவித்தார்.

அனைத்து சிக்னலுக்குமே ரிமோட் முறையில் சிக்னல்கள் செயல்பட உள்ளன. கூடிய விரைவில் அனைத்து சிக்னல்களுக்கும் ரிமோட் அளிக்கப்படவுள்ளது. மேலும் காவல்துறையில் வாகன விதி மீறல்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவது ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் மட்டுமே வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும், மீறி வேறு காவலர்கள் வழக்குப் பதிவு செய்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ இவ்வாறு சுதாகர் கூறினார்.