துணைக்கமிஷனர் பொன்கார்த்திக் குமார், சிசிபி உதவிக்கமிஷனருக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறந்த புலனாய்வு விருது
Fமத்திய உள்துறை அமைச்சகத்தின் 2023ம் ஆண்டுக்கான சிறந்த புலனாய்வு அதிகாரி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அடையாறு துணைக்கமிஷனர் பொன் கார்த்திக் குமார் மற்றும் மத்திய குற்றப்பிரிவு உதவிக்கமிஷனர் ஆகியோரை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டினார்.

பொன்கார்த்திக் குமார், போலீஸ் துணைக்கமிஷனர், அடையாறு.
சிறந்த புலனாய்வுப் பணியை மேற்கொள்ளும் அதிகாரிகளை மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் ஆண்டுதோறும் பாராட்டி பரிசு வழங்கி வருகிறது. அந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான சிறந்த புலனாய்வு விருதை சென்னை அடையாறு போலீஸ் துணைக்கமிஷனர் பொன்கார்த்திக் குமார் மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலி ஆவணங்கள் மோசடி தடுப்புப்பிரிவு உதவிக்கமிஷனர் ஜான் விக்டர் ஆகியோர் பெற்றுள்ளனர். அவர்களை இன்று கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நேரில் அழைத்து பாராட்டினார்.

ஜான் விக்டர், உதவிக்கமிஷனர், சென்னை மத்திய குற்றப்பிரிவு
துணைக்கமிஷனர் பொன்கார்த்திக் குமார் கடந்த 2018ம் ஆண்டு, சேலம் மாவட்டம், ஆத்தூர் உட்கோட்டம், துணை கண்காணிப்பாளராக பணிபுரிந்தபோது, 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் திறமையாக புலன் விசாரணை மேற்கொண்டு, குற்றவாளியை கைது செய்துள்ளார். மேலும், இவ்வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை பெற்றுத்தந்துள்ளார்.
உதவிக்கமிஷனர் ஜான் விக்டர், 2015ம் ஆண்டு, சிபிசிஐடி, கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளராக பணிபுரிந்தபோது, பெரவள்ளூர் காவல் நிலைய எல்லையில், 16 வயது சிறுமி காணாமல் போனார். அந்த வழக்கில், குழந்தைகள் நல அமைப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததின் பேரில், நீதிமன்ற உத்தரவுப்படி ஆய்வாளர் ஜான் விக்டர், இவ்வழக்கை திறம்படி விசாரணை செய்து, காணாமல் போன சிறுமியை ஒரே நாளில் கண்டுபிடித்து, குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளார். மேலும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும், முறையாக சாட்சிகளை ஆஜர் செய்தும், இவ்வழக்கில் தொடர்புடைய 3 குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 1 குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 2 குற்றவாளிகளுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் பெற்றுத் தந்துள்ளார்.
மேற்படி வழக்குகளில் திறமையாக புலனாய்வு செய்து, குற்றவாளிகளை கைது செய்தும், தண்டனை பெற்றுத் தந்ததற்காக துணை ஆணையாளர் திரு.R.பொன்கார்த்திக் குமார் மற்றும் உதவி ஆணையாளர் திரு.S.ஜான் விக்டர் ஆகியோர் மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறந்த புலனாய்வுக்கான பதக்கத்துக்கு (Award of Union Home Minister’s Medal for Excellence in Investigation-2023)தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.