கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தலைமையில் சென்னை மெரீனாவில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

224

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் போதைக்கு எதிரான விழிப்புணர்வு மணற் சிற்பத்தை திறந்து வைத்து, போதைக்கு எதிரான உறுதி மொழி ஏற்று, கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் “போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு (DRUG FREE TAMILNADU)” என்ற திட்டத்தை துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து, சென்னை பெருநகரில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், Drive Against Drugs (DAD) என்ற பெயரில் போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களான வணிக வளாகங்கள், கடற்கரை, பூங்காக்கள்,

பேருந்து நிறுத்தங்கள் மற்றும் இதர இடங்களில் போதை பொருட்களுக்கு எதிரான தீமைகள் குறித்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள், பதுக்கிவைப்பவர்கள், விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு போதை பொருட்கள் நடமாட்டம் ஒழிக்கப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து இன்று (11.08.2023) சென்னை, கலைவாணர் அரங்கில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தலைமையில், தமிழக காவல் துறை சார்பில் நடைபெற்ற “போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து இன்று (11.08.2023) மாலை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் இராதாகிருஷ்ணன் ஆகியோர் மெரினா கடற்கரை, விவேகானந்தர் இல்லம் எதிர்புறம் உள்ள மணற்பரப்பில் போதை ஒழிப்பு குறித்த மணற் சிற்பத்தை திறந்து வைத்து, போதைக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தும், போதை விழிப்புணர்வு உறுதி மொழியை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடன் எடுத்துக்கொண்டனர். மேலும் போதை விழிப்புணர்வு பலூனையும் பறக்கவிட்டனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் & காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்ற மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த 2022ம் ஆண்டில் சென்னை பெருநகரில் போதை பொருட்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு, கஞ்சா மற்றம் போதை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக மொத்தம் 890 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1503 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். மேற்படி வழக்குகளில் மொத்தம் 1700 கிலோ கிராம் கஞ்சா மற்றும் இதர போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் மேற்படி வழக்குகளில் சம்பந்தப்பட்டு தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 62 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகள் மற்றும் விசாரணை முடிந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களின் உத்தரவுப்படி 1932 கிலோ கஞ்சா மற்றும் மெத்தபெட்டமைன், கஞ்சா ஆயில் உள்ளிட்ட இதர போதை பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளது.

2023ம் ஆண்டு கடந்த 7 மாதங்களில் சென்னை பெருநகரில் போதை பொருட்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு, கஞ்சா மற்றம் போதை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக மொத்தம் 616 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 933 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற லுக்கு உட்படுத்தப்பட்டனர். மேற்படி வழக்குகளில் மொத்தம் 2,143 கிலோ கிராம் கஞ்சா மற்றும் இதர போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் மேற்படி வழக்குகளில் சம்பந்தப்பட்டு தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 43 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகள் மற்றும் விசாரணை முடிந்த வழக்குகளில் நீதிமன்றங்களின் உத்தரவுப்படி 1,498 கிலோ கிராம் கஞ்சா மற்றும் மெத்தபெட்டமைன்,கஞ்சா ஆயில் உள்ளிட்ட இதர போதை பொருட்கள் அழிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் சென்னை பெருநகர கூடுதல் ஆணையாளர் பிரேம் ஆனந்த் சின்கா (தென்சென்னை), இணை ஆணையாளர்கள் திஷா மிட்டல் (கிழக்கு மண்டலம்), சாமுண்டீஸ்வரி (வடக்கு மண்டலம்), மயிலாப்பூர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் ரஜத் சதுர்வேதி, உதவி ஆணையாளர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.