சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் “CYBER ALERT APP” என்னும் புதிய செல்போன் செயலியை துவக்கி வைத்தார்.

தொழில்நுட்பம் வளர்ந்து, உலகமே ஒரு கிராமமாக மாறிவிட்ட சூழ்நிலையில் இணையதளத்தின் பயன்பாடு இன்று அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக இணைய வெளி குற்றங்களும் பெருகி வருகின்றன. சைபர் குற்றங்களை எங்கிருந்தும் நிகழ்த்த இயலும் என்பதால் சைபர் குற்றவாளிகள் நாடு, மொழி கடந்து உலகெங்கும் பரவியுள்ளனர். அதேபோல் பாதிக்கப்படும் மக்களும் பல்வேறு நாடுகளை நகரங்களை சேர்ந்தவர்கள். சைபர் குற்றவாளிகள் பொதுமக்களை ஏமாற்ற பல்வேறு புதிய யுத்திகளை கையாண்டு வருகின்றனர்.
அதேபோல் புதிய தொழில்நுட்பங்கள் சாதாரண பொது மக்களின் உபயோகத்திற்கு வருவதற்கு முன்னரே, அதனை கையாண்டு பயன்படுத்தி மக்களை ஏமாற்றுவதிலும் சைபர் குற்றவாளிகள் கைதேர்ந்தவர்கள். முதலில் வங்கி கணக்குகளை தங்கள் லாபத்திற்கு உபயோகித்து வந்தவர்கள், தற்போது பண பரிவர்த்தன வாலட்டுகள் தொடங்கி, கிரிப்டோ வாலட்டுகளை பயன்படுத்தி ஏமாற்றி வருகின்றனர். குற்றம் புரிவதற்கு எண்ணற்ற மொபைல் எண்கள், விர்ட்யுவல் எண்கள், வாட்சாப், டெலிகிராம் போன்ற செயலிகள், தற்காலிக வெப்சைட்டுகள், பல்வேறு வங்கி கணக்குகள் போன்றவற்றை உபயோகிக்கின்றனர். தற்போது பார்ட் டைம் ஜாப் ஆஃபர், ஆன்லைன் கிரிப்டோ இன்வெஸ்ட்மென்ட் மோசடி போன்ற வழக்குகள் பதிவாகின்றன.
இக்குற்றங்கள் ஒருங்கமைக்கப்பட்ட குறிப்பிட்ட குழுவினரால் நிகழ்த்தப் பெறுகின்றன. மேலும் சைபர் குற்றங்கள் தொடர்பான வழக்குகள் அனைத்து காவல் நிலையங்களிலும் பதியப்படுகின்றன. இந்நிலையில் குற்றங்களை வகைப்படுத்தி, குற்றவாளிகளின் தகவல்களோடு தொடர்பு படுத்துவதன் மூலம் குற்றவாளிகளை எளிதில் கண்டறிவதும், கைது செய்வதும் இயலும் என்பதன் அடிப்படையில் சென்னை பெருகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவுப்படி, சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் செல், “CYBER ALERT APP” என்ற செல்போன் செயலியை வடிவமைத்துள்ளது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் இன்று (28.06.2023) மாலை வேப்பேரி, காவல் ஆணையாளர் அலுவலகம், 2வது தளத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு “CYBER ALERT APP” என்னும் புதிய செல்போன் செயலியை துவக்கி வைத்தார்.
இந்த செயலியின் வழியாக சைபர் குற்றவாளிகள் பயன்படுத்திய மொபைல் எண்கள், வங்கி கணக்குகள், சமூக வலைதள கணக்குகள், இமெயில் ஐடிகள், வெப்சைட்டுகள் போன்றவை சென்னை பெருநகர காவல் துறையின் 20 காவல் பிரிவுகளால் உள்ளீடு செய்யப்படுகிறது. மொபைல் எண்களோ அல்லது ஒன்றிற்கும் மேற்பட்ட மற்ற தரவுகளோ வழக்குகளில் தொடர்புடையதாக இருப்பின் அந்த வழக்குகள் ஒருங்கிணைந்து இந்த செயலியின் மூலம் வகைப்படுத்தப்படும். அது குறித்த தகவல்கள் தொடர்புடைய காவல் பிரிவுகளுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பப்படும். மேலும் காலஇடைவெளி அறிக்கைகள், குற்ற செயல்வகை தொடர்பான அறிக்கைகள், ஒரே தரவுகள் தொடர்பான அறிக்கைகள் போன்றவற்றையும் இச்செயலியின் மூலம் பெற இயலும். இதன் வாயிலாக, உயர் அதிகாரிகள் சைபர் குற்றத் தரவுகளை கண்காணித்து, புலனாய்வு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியும், மேலும் தனிப்படைகளை அமைத்து அதிக அளவில் குற்றவாளிகளை வெளி மாநிலங்கள் சென்று கைது செய்வதை மேம்படுத்தவும் இயலும்.
பெருகிவரும் சைபர் குற்றங்களை வகைப்படுத்துவதிலும், குற்றத் தரவுகளை ஒருங்கிணைப்பதிலும், அதன் மூலம் ஒன்றுக்கொன்று தொடர்புடைய குற்றங்களை எடுத்துக்காட்டுவதிலும் இந்த Cyber Alert App செயலியானது முக்கிய பங்காற்றும். இதன் வாயிலாக சைபர் குற்றவாளிகளை கைது செய்வது எளிதாகும். சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்பட்டிருக்கும் இந்த Cyber Alert App செயலியானது, தமிழ்நாடு முழுவதற்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் மகேஷ்வரி, துணை ஆணையாளர்கள், நாகஜோதி, (மத்தியக் குற்றப்பிரிவு-1) மீனா (மத்தியக் குற்றப்பிரிவு-2), ஸ்டாலின் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.