தனியார் நிறுவன நிர்வாக இயக்குநர் என்று கூறி ரூ. 1,16,78,840 பணத்தை ஏமாற்றிய பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 2 நபர்களை சென்னை சைபர்கிரைம் போலீசார் கைது செய்தனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த நபர் ஒருவர் சென்னை காவல் ஆணையாளரிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில் தன்னுடைய நிறுவன Managing Director-ன் புகைப்படத்தை Profile Photo-வாக வைத்து வாட்ஸ்அப் எண் மூலம் தொடர்பு கொண்ட நபர் பணம் அனுப்புமாறு கூறியதை உண்மை என்று நம்பி தனது நிறுவனத்தின் வங்கி கணக்கிலிருந்து ரூ. 1,16,78,840- பணத்தை அனுப்பியதாகவும் பின்னர் தான் தனக்கு வந்த வாட்ஸ்அப் எண்ணிலிருந்து வந்த தகவலானது மோசடி என்பது தெரிய வந்ததாகவும் நடவடிககை எடுக்கும்படி கொடுத்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த புகார் தொடர்பாக கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஷ்வரி மேற்பார்வையில், சைபர் கிரைம் காவல் குழுவினர் விசாரணை நடத்தினர். இதில் பணம் அனுப்பிய வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் மொபைல் எண் விவரங்கள் போன்றவை சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. மேலும் குற்றவாளிகளின் வங்கி கணக்கோடு தொடர்புடைய மொபைல் எண் அழைப்பு விவரங்கள், இமெயில் ஐடியின் ஐபி விவரங்களும் சேகரிக்கப்பட்டன. வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்ட ஏடிஎம்-ன் விவரங்களும் சிசிடிவி பதிவுகளும் பெறப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. விசாரணையில் குற்றவாளிகள் பீகாரில் இருந்து இந்த குற்றத்தை செய்து வந்தது தெரியவந்ததன் அடிப்படையில் காவல் உதவி ஆணையாளர் தலைமையில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு பீகாருக்கு சென்று புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதனையடுத்து இந்த மோசடியில் ஈடுபட்ட பீகார் மாநிலம், கோபால்கானியைச் சேர்ந்த சயீப் கான் (22), ராஜ்ராய்சிங் (28) ஆகிய இரண்டு பேரை போலீசார் கடந்த 23-ம் தேதியன்று பீகாரில் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 செல்போன்கள், மெமரி கார்டுகள் மற்றும் குற்றத்திற்கு பயன்படுத்திய சிம் கார்டுகள் கைப்பற்றப்பட்டது. குற்றவாளிகள் பீகார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 26.06.2023 தேதி சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
வழக்கு பதிவு செய்யப்பட்ட குறுகிய காலத்தில் மோசடியில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டறிந்து பீகாருக்கு சென்று கைது செய்து வந்த சைபர் கிரைம் அணியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் வெகுவாக பாராட்டினார். மேலும் அடையாளம் தெரியாத நபர்கள் மற்றும் தெரியாத (Unknown) தொலைபேசி எண்களிலிருந்து வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் சைபர் கிரைம் காவல் நிலையங்களை அணுகுமாறும் பொதுமக்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.