தாம்பரம் காவல் ஆணையரகம் வெளியிட்ட போதை விழிப்புணர்வு குறும்படம்

177

போதை விழிப்புணர்வு தொடர்பாக தயாரிக்கப்பட்ட குறும்படத்தை தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் வெளியிட்டார்.

தமிழகத்தில் போதைப்பொருளை அறவே ஒழிக்கும் பொருட்டு முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் போதையில்லா தமிழகம் என்ற பெயரில் காவல்துறையினர் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். தாம்பரத்தில் கமிஷனர் அமல்ராஜ் பொறுப்பேற்றதும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக கஞ்சா, ஹெராயின் முதலிய போதைப் பொருட்களை உட்கொண்டு இளைஞர்களும், மாணவர்களும் தம் உடல்நலத்தையும், மனநலத்தையும் கெடுத்துக் கொள்ளக்கூடாது என்பதை விளக்கும் வகையில் தாம்பரம் மாநகரக் காவல்துறை, கிரியாஸ் தனியார் நிறுவனத்துடன் இணைந்து குறும்படங்களைத் தயாரித்து வெளியிடுகிறது.

அரை நிமிடம் மட்டுமே ஒடக்கூடிய இந்தக் குறும்படங்களைப் பார்ப்பவர்கள் மனதில், அவற்றின் செய்தி ஆழப்பதியும்படி தயாரிக்கப்பட்டுள்ளன. போதைப் பொருட்களை உள்கொள்பவர்கள், யார் யாருடைய தொடர்பினால் அவற்றை முதன் முதலில் பயன்படுத்தத் தொடங்குகிறார்கள் என்பதையும், போதைப் பொருட்களை யார் கொடுத்தாலும் அவற்றை ஏற்றுக் கொள்ளாமல் முதன் முறையே மறுக்க வேண்டும் என்பதையும் இந்த குறும்படம் வலியுறுத்துகின்றன. மிக எளிமையாக அனைவருக்கும் புரியும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்தக் குறும்படங்களில் ஒன்றை நேற்று தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் வெளியிட்டார்.