சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரின் உத்தரவுப்படி மவுண்ட் துணைக்கமிஷனர் தலைமையிலான அதிகாரிகள் வயதான தம்பதியின் வீட்டுக்கு சென்று குறைகளை கேட்டறிந்து அதனை நிவர்த்தி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னை நகர போலீஸ் கமிஷனராக சந்தீப்ராய் ரத்தோர் பதவி ஏற்றதும் வயதான மூத்த குடிமக்கள் கொடுக்கும் புகார்களின் மீது அவர்களது வீட்டுக்கே சென்று உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் சென்னை நகர காவல் அதிகாரிகள் மூத்த குடிமக்களின் வீடுகளுக்கே நேரில் சென்று விசாரணை செய்து அவர்களது புகார்கள் மீது நடவடிக்கைகள் எடுத்து குறைகளை தீர்த்து வருகின்றனர். கடந்த வாரம் சென்னை திருவல்லிக்கேணி மற்றும் கோயம்பேடு காவல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சென்னை, மடிப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் வயதான கணவன் மனைவி பார்த்தசாரதி (வயது 82), வள்ளியம்மாள் (77). பார்த்தசாரதி இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து கடந்த 2000 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றுள்ளார். இவர்களுக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மூத்த மகன் மகேந்திரன் கடலூர் NLC நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இளையமகன் ஸ்ரீநிவாசன் என்பவருடன் பார்த்தசாரதி மற்றும் வள்ளியம்மாள் ஆகிய இருவரும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பார்த்தசாரதி இறுதிகால மருத்துவ தேவைகளுக்காக மனைவி வள்ளியம்மாள் பெயரில் செங்கல்பட்டு மாவட்டம், செங்குன்றம் கிராமத்தில் உள்ள 6,000 சதுர அடி கொண்ட நிலத்தை மட்டும் தன் கைவசம் வைத்துக்கொண்டு மற்ற சொத்துக்களை 3 மகன்கள் மற்றும் 1 மகளுக்கு சரிசமமாக பங்கிட்டுக் கொடுத்துள்ளார்.
முதியவர் பார்த்தசாரதி மற்றும் அவரது மனைவிக்கு மாதந்தோறும் மருத்துவம் மற்றும் இதர செலவுகளுக்கு அதிகளவில் பணம் தேவைப்பப்படுவதால், மேற்படி இடத்தை விற்று பணத்தை வங்கியில் டெபாசிட் செய்து கிடைக்கும் வட்டியில் மருத்துவம் மற்றும் இதர செலவுகளை சமாளிக்கலாம் என எண்ணி மேற்படி 6000 சதுரடி நிலத்தை விற்க முயற்சி செய்துள்ளார். ஆனால் கடந்த 2022ம் ஆண்டு அவரது மூத்த மகன் மகேந்திரன் மேற்படி நிலத்தை விற்ககூடாது என கூறி நிலத்தின் அசல் ஆவணங்களை பார்த்தசாரதியின் அனுமதியில்லால் எடுத்துக்கொண்டு போயுள்ளார். பார்த்தசாரதி பல முறை நிலத்தின் அசல் ஆவணங்களை திரும்ப கேட்டபோதும் மூத்த மகன் மகேந்திரன் திரும்ப கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கும் படி முதியவர் பார்த்தசாரதி கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரிடம் கடந்த 23.08.2023 அன்று புகார் அளித்திருந்தார்.
அதனையடுத்து கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் புனித தோமையர்மலை துணைக்கமிஷனரை பார்த்தசாரதி வீட்டிற்கு அனுப்பி வைத்து முதியவரின் குறையை தீர்த்து வைக்கும்படி உத்தரவிட்டார். அதன்பேரில் கடந்த 29.08.2023 அன்று புனித தோமையர்மலை துணைக்கமிஷனர் தீபக் சிவாச் தலைமையில் காவல் குழுவினர் முதியவர் பார்த்தசாரதி வீட்டிற்கு நேரில் சென்று வயதான தம்பதியிடம் விசாரணை செய்தனர். மேலும் அவரது மூத்த மகன் மகேந்திரனிடம் விசாரணை செய்து நிலத்தின் அசல் ஆவணங்களை தந்தை பார்த்தசாரதியிடம் ஒப்படைக்கும் படி கூறினர். மேலும் மேற்படி மூதியவரின் வீட்டில் பட்டா புத்தகம் வைக்கப்பட்டு காவல் துறை அதிகாரிகள் அவ்வப்போது தணிக்கை செய்து அவர்களின் தேவைகளை கேட்டறிந்து உதவி செய்யுமாறு மடிப்பாக்கம் சரக காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து இன்று (03.09.2023) பார்த்தசாரதியின் மூத்த மகன் மகேந்திரன் பெற்றோரின் வீட்டில் இருந்து எடுத்து சென்ற சொத்தின் அசல் ஆவணங்களை தந்தை பார்த்தசாரதியிடம் ஒப்படைத்தார். பார்த்தசாரதியும் மனம் மகிழ்ந்தார்.
தனது புகாரின் மீது தனது வீட்டுக்கே வந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோருக்கும், துணைக்கமிஷனர் தீபக் சிவாச் மற்றும் காவல் அதிகாரிகளுக்கு முதியவர் பார்த்தசாரதி மற்றும் அவரது மனைவி வள்ளியம்மாள் ஆகியோர் மனதார பாராட்டி நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.