ரயில் நிலைய லிப்ட்டில் சிக்கிய 9 பேரை துரிதமாக மீட்ட ஆயுதப்படை துணைக்கமிஷனருக்கு கமிஷனர் அருண் பாராட்டு
ரயில் நிலைய லிப்ட்டில் சிக்கிய 9 நபர்களை மீட்க துரிதமாக செயல்பட்ட சென்னை நகர ஆயுதப்படை துணைக்கமிஷனரை போலீஸ் கமிஷனர் அருண் வெகுவாக பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

நேற்று முன்தினம் இரவு (14.10.2024) பேசின்பாலம், ரயில் நிலையத்தில் உள்ள லிப்ட்டில் 7 பெண்கள் உட்பட 9 நபர்கள் ஏறிய போது திடீரென பழுதானதால் பாதியில் நின்றபடி அதற்குள் சிக்கிக் கொண்டனர். தங்களை காப்பாற்றும்படியும், மின்தூக்கியிலிருந்த ஒரு நபர் செல்போன் மூலம் காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுத்தார். உடனே, இரவு ரோந்து பணியிலிருந்த ஆயுதப்படை துணை ஆணையாளர் அன்வர் பாஷா மற்றும் காவல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பேசின்பாலம் ரயில் நிலைய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, லிப்ட் மெக்கானிக்கை வரவழைத்தனர். சுமார் 40 நிமிடங்கள் கடுமையாக வேலை செய்து மின்தூக்கி சரி செய்யப்பட்டு, உள்ளே சிக்கியிருந்த மாற்றுத்திறனாளி உள்ளிட்ட 9 நபர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் துரிதமாக செயல்பட்டு, லிப்ட்டில் சிக்கிய 7 பெண்கள் உட்பட 9 நபர்களை மீட்க உறுதுணையாக பணியாற்றிய துணைக் கமிஷனர் அன்வர் பாஷாவை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார்.