வெள்ள மீட்புப் பணியில் சென்னை நகர காவல்­துறை 

168
14.10.2024ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியதை முன்னிட்டு அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தவிர்க்கவும், பொதுமக்களுக்கு உதவும் வகையிலும், 12 காவல் மாவட்டங்களில் 35 சிறப்பு கட்டுப்பாட்டறைகளும், அந்தந்த மாவட்ட காவல் துணை ஆணையாளர் அலுவலகங்களில் சிறப்பு கட்டுப்பாட்டறைகளும், காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தலைமைக் கட்டுப்பாட்டறையும் துவங்கப்பட்டு, ஒருங்கிணைந்து, தொடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, நேற்றும் இன்றும் பெய்த மழையின் காரணமாக, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட மழைநீர் பெருக்கு காரணமாக மழைநீர் தேங்கிய இடங்களிலும் சாலைகளிலும் மரங்கள் விழுந்து போக்குவரத்து தடை ஏற்பட்டதையும், சென்னை பெருநகர காவல் துறையினர் மற்றும் இயற்கை பேரிடர் மீட்பு குழுவினர் இணைந்து போர்க்கால அடிப்படையில், உடனுக்குடன் மரங்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தும், மழைநீர் தேங்கிய இடங்களில் அடைப்புகளை சரி செய்து, மழைநீர் வடியவும் பெரிதும் பங்காற்றி வருகின்றனர்.
12 காவல் மாவட்டங்களிலும் உள்ள 35 சிறப்பு கட்டுப்பாட்டறைகள், காவல் மாவட்ட அலுவலகங்களில் செயல்பட்டு வந்த 12 சிறப்பு கட்டுப்பாட்டறைகளிலும், காவல் ஆணையரகத்தில் செயல்பட்டு வருகின்ற தலைமை கட்டுப்பாட்டறையிலும், மொத்தமாக சேர்த்து மழைநீர் தேங்கியது தொடர்பான 102 அழைப்புகள் பெறப்பட்டது. இவற்றில் பெரும்பாலான இடங்களில் தேங்கிய மழைநீர் வடிய தக்க வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், மரங்கள் விழுந்தது தொடர்பாக 8 அழைப்புகள் பெறப்பட்டது. அனைத்து மரங்களும் வெட்டி அகற்றப்பட்டு, போக்குவரத்து உடனடியாக சீர் செய்யப்பட்டது.
வளசரவாக்கம் போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் ராமாபுரம், ராயலா நகர் 3வது தெருவில் 85 வயது மூதாட்டியின் வீட்டினுள் மழைநீர் புகுந்ததை தொடர்ந்து, அவரையும், அவரது மகனையும் பத்திரமாக மீட்டு நிவாரண மையத்தில் பாதுகாப்பாக கொண்டு போய் சேர்த்தனர்.
1.பெரம்பூர் ரயில்வே சுரங்கப்பாதை, 2.கணேசபுரம், 3.சுந்தரம் பாயிண்ட், 4.ரங்கராஜபுரம் மற்றும் 5.மேட்லி சுரங்கப்பாதை ஆகிய 5 சுரங்கப்பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டு, மழைநீர் அகற்றும்பணி துரிதமாக போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
மேலும், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை முதல் சுதந்திரதின பூங்கா வரையிலான சாலை தற்காலிகமாக மூடப்பட்டு, டேங்க் பண்ட் ரோடு, மகாலிங்கபுரம் வழியாக போக்குவரத்து திருப்பிவிடப்படுகிறது. பெரியார் பாதை முதல் நெற்குன்றம் சாலை வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அண்ணா சாலை முதல் GP ரோடு தற்காலிகமாக சாலை மூடப்பட்டுள்ளது. கோயம்பேடு    A ரோட்டில் கனரக வாகனம் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகிறது. பாடி நோக்கு செல்லும் திருமங்கலம் மேம்பாலம் சர்வீஸ் சாலை வழியாக செல்லும் வாகனங்கள் எஸ்டேட் ரோடு மற்றும் பார்க் ரோடு வழியாக மாற்றிவிடப்பட்டு வருகிறது. சிவசாமி சாலை தற்காலிகமாக மூடப்பட்டு, ஒரு வழி பாதையாக நீல்கிரிஸ் வழியாக திருப்பிவிடப்படுகிறது. ஆழ்வார்பேட்டை நோக்கி செல்லும் லஸ் சர்ச் ரோடு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.