காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் 416 பேரிடம் மனுக்களை நேரில் பெற்ற கமிஷனர் அருண்: உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு
காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில், சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து கமிஷனர் அருண் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் இன்று (19.11.2024) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற ‘‘காவலர்கள் குறை தீர்க்கும் முகாமில்‘‘ ஆயுதப்படை-1, ஆயுதப்படை-2, மோட்டார் வாகன பிரிவுகளில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் ஆளிநர்களிடமிருந்தும், வேப்பேரி, காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடந்த காவலர்கள் குறை தீர்க்கும் முகாமில், சென்னை பெருநகர காவல், கட்டுப்பாட்டு அறை, உயர் நீதிமன்றம் பாதுகாப்பு பிரிவு, பணியிடை பயிற்சி மையம் மற்றும் தலைமைச்செயலகம் ரோவிங் ஆகிய சிறப்பு பிரிவுகளில் பணியாற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் குறைகளை கேட்டறிந்து, மொத்தம் 416 குறைதீர் மனுக்களை பெற்றார். இம்முகாமில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் பணிமாறுதல், தண்டனை களைதல், காவலர் குடியிருப்பு கோருதல், ஊதியம் குறைபாடு களைதல் உள்ளிட்ட மனுக்களை பெற்று, இம்மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இம்முகாமில், சென்னை பெருநகர காவல், கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) கபில்குமார் சி சரட்கர், கயல்விழி (தலைமையிடம்), துணை ஆணையாளர்கள்கள் மெஹலினா ஐடன் (தலைமையிடம்), ஜெயகரன், (ஆயுதப்படை-1), அன்வர் பாஷா, (ஆயுதப்படை-2), இராதாகிருஷ்ணன், (மோட்டார் வாகன பிரிவு) ஆகிய காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.