முந்திரி பருப்பு ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்தி வருவதாக கூறி ரூபாய் 40 லட்சம்- பண மோசடியில் ஈடுபட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த நபரை தூத்துக்குடி மாவட்டக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி நடுக்குப்பன் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் (53). அங்கு முந்திரி பருப்பு வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் தூத்துக்குடி கிரகோப் தெருவைச் சேர்ந்த தாமஸ் பியோ என்பவர் மூலம், தூத்துக்குடி, ஜார்ஜ் ரோடு, புல்தோட்டம் பகுதியைச் சேர்ந்த முகமது ரபிக் (42) என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். தான் கடலூரில் முந்தரிப் பருப்பு ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்தி வருவதாகவும் தன்னிடம் ரூபாய் 42 லட்சம் மதிப்புள்ள 50 டன் முந்திரி பருப்பு இருப்பதாகவும் பணத்தை அனுப்பி வைத்தால் உடனடியாக சரக்கை அனுப்பி வைப்பதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பிய தேவராஜ் கடந்த 2021ம் ஆண்டு ரூ. 50 ஆயிரம்- பணமும், 11.05.2023 அன்று ரூ. 42 லட்சம் என மொத்தம் ரூபாய் 42,50,000- பணத்தை அவரது வங்கி கணக்கிலிருந்து முகமது ரபிக் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட முகமது ரபிக் சரக்கை அனுப்பாமல் ஏமாற்றியுள்ளார். அது குறித்து முகமது ரபிக்கிடம் தேவராஜ் பலமுறை பணத்தை திரும்ப கேட்ட போது ரூ 2 லட்சம் மட்டும் திரும்ப தந்துள்ளார்.மீதி தொகையை திருப்பி தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.
இது குறித்து தேவராஜ் தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணனிடம் புகார் அளித்தார். எஸ்பி உத்தரவின் பேரில் மாவட்ட குற்ற பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் முகமது ரபீக் தேவராஜிடம் ரூ. 45 லட்சம் பண மோசடி செய்தது உண்மை என்பது தெரியவந்தது. அதனையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் அந்தோணியம்மாள் தலைமையிலான தனிப்படையினர் முகமது ரபிக்கை இன்று கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர் முகமது ரபீக் 4வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார்.