சென்னை யானைக்கவுனியில் இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 15 லட்சம் ஹவாலா பணத்தை போலீசார் பறிமுதல் செய்து வருமானவரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் யானைக்கவுனி போலீஸ் தலைமைக்காவலர் பாஸ்கர் பூக்கடை என்எஸ்சி போஸ் ரோட்டில் ரோந்துப் பணியில் இருந்தார். அப்போது அந்த வழியாக பிரவுன் நிற ஜுபிடர் பைக்கில் வந்த சந்தேக நபரை பின் தொடர்ந்து சென்று சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த பைக்குள் ரூ. 15 லட்சம் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அந்த நபர் சென்னை புரசைவாக்கம் கந்தப்ப செட்டி தெருவைச் சேர்ந்தவர் முகமது முஸ்தாக் (வயது 38) என்பது தெரியவந்தது. அது தொடர்பாக யானைக்கவுனி இன்ஸ்பெக்டர் கண்ணகிக்கு தகவல் தெரிவித்தனர். அதனையடுத்து முகமது முஸ்தாக்கை ரூ. 15 லட்சம் பணத்துடன் யானைக்கவுனி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அந்த பணம் கணக்கில் வராத ஹவாலா பணம் என்பது தெரியவந்தது. அதனையடுத்து அவரை போலீசார் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.