அடையாறு வங்கியில் கடன் பெற்று ரூ. 72.55 லட்சம் மோசடி செய்த நபர் கைது: சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை
சென்னை, அடையாறு பகுதியில் உள்ள SBI வங்கியில் தொழில் கடன் பெற்று ரூ. 72.55 லட்சம் மோசடி செய்த நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

சென்னை அடையாறு, எஸ்பிஐ வங்கியின் முதன்மை மேலாளர் ஹெரால்டின் மினி என்பவர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருணிடம் ஒரு புகார் மனு அளித்தார். வேல்முருகன் என்பவர் Annai Casting Pvt Ltd., என்ற நிறுவனத்தின் பெயரில் தொழில் கடன் பெற்றார். அந்தத் தொகையில் வாங்கிய இயந்திரங்களை தனது நிறுவனத்தில் Install செய்யாமலும், தொழிலை விரிவுபடுத்தாமலும் காலம் தாழ்த்தி வந்துள்ளார். மேலும் வங்கிக்கு கடனை திரும்ப செலுத்தாமல் இருந்து வந்ததால் கடன் கணக்கானது வாராக் கடனாக அறிவிக்கப்பட்டது. வங்கிக் கடனில் பெற்ற இயந்திரங்கள் மற்றும் வாகனத்தை வங்கி தரப்பில் பறிமுதல் செய்து விடுவார்கள் என்பதால் அவற்றை மறைத்துள்ளார், மேலும் கடன் தொகையை தனது சொந்த செலவிற்காக பயன்படுத்தியுள்ளார். வங்கியில் பெற்ற கடன்தொகையை வங்கிக்கு திருப்பி செலுத்தாமல் வங்கிக்கு ரூ.72,55,834- இழப்பீடு செய்துள்ளார். அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் கூறியிருந்தார்.
இந்தப் புகார் மனு தொடர்பாக சென்னை பெருநகர பெருநகர காவல் ஆணையாளர் அருண் உத்தரவின்பேரில, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் ராதிகா மேற்பார்வையில், வங்கி மோசடி புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை நடத்தினர். இதில் எஸ்பிஐ வங்கி சார்பில் அளித்த புகார் உண்மை என்பது தெரியவந்தது. அதனையடுத்து தலைமறைவாக இருந்த கோடம்பாககத்தைச் சேர்ந்த வேல்முருகன் (வயது 45) என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் வேல்முருகன் நீதிமன்ற காவலுக்க உட்படுத்தப்பட்டார். மேற்படி எதிரியை கைது செய்த வங்கி மோசடி புலனாய்வு பிரிவு, காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் வெகுவாக பாராட்டினார்.