சென்னை, ஜெ.ஜெ நகர் பகுதியில் மூதாட்டியிடம் தங்கச்சங்கிலியை பறித்த நபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 5 சவரன் தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்தனர்.

சென்னை, அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம், TVS அவென்யூ பகுதியில் வசித்து வருபவர் கோமதி (வயது 70). நேற்று (18.08.2023) மாலை தனது வீட்டில் இருந்த போது, தண்ணீர் கேன் போடுவதாக வீட்டிற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர், கோமதியை கீழே தள்ளி விட்டு, அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்ப முயன்றார். அப்போது, கோமதி கூச்சலிடவே, அருகிலிருந்தவர்கள் அந்த நபரைப் பிடித்து ஜெ.ஜெ நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததின் பேரில், காவல்குழுவினர் உடனே சம்பவயிடத்திற்கு சென்று எதிரியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
ஜெ.ஜெ நகர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் மில்லர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, மூதாட்டியின் மகன் திருப்பதி மகாலிங்கம் என்பவர் கொடுத்த புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்து ஓட்டேரியைச் சேர்ந்த பிரகாஷ் (39) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து மூதாட்டியின் 5 சவரன் தங்கசங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் கைது செய்யப்பட்ட பிரகாஷ் மீது ஏற்கனவே திருட்டு, வழிப்பறி உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட எதிரி பிரகாஷ் விசாரணைக்குப் பின்னர், இன்று (19.08.2023) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.