சென்னை, புளியந்தோப்பு, நரசிம்மா நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் @ ஆற்காடு சுரேஷ் (49). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு கொலை, அடிதடி ஆட்கடத்தல் வழக்குகள் உள்ளன. வேலூர் மாவட்டத்தில் வசித்து வந்தார். இவர் நேற்று (18.08.2023) மாலை சென்னை, பட்டினம்பாக்கம், லூப் சாலை, நம்பிக்கை நகர் பகுதியில் தனது நண்பர் மாது (எ) மாதவன் என்பவருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 5க்கும் மேற்பட்ட நபர்கள் ஆற்காடு சுரேஷ் மற்றும் அவரது நண்பர் மாது (எ) மாதவன் ஆகிய இருவரையும் வழிமறித்து கத்தியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இந்தத் தாக்குதலில் காயமடைந்த சுரேஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டார். மாது (எ) மாதவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக மோகன் என்பவர் பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டதன் பேரில், கூடுதல் ஆணையாளர் பிரேம் ஆனந்த் சின்கா அறிவுரையின் பேரில் கிழக்கு மண்டல இணை ஆணையாளர் திஷா மிட்டல் மற்றும் மயிலாப்பூர் துணை ஆணையாளர் ரஜத் சதுர்வேதி ஆகியோர் நேரடி மேற்பார்வையில் மைலாப்பூர் உதவி ஆணையாளர் மற்றும் பட்டினம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட திருவள்ளூர், அரண்வாயில் கிராமத்தைச் சேர்ந்த சந்துரு (எ) சைதாப்பேட்டை சந்துரு (29), சென்னை எம்ஜிஆர் நகர், சூளைப்பள்ளத்தைச் சேர்ந்த யமஹா மணி (எ) மணிவண்ணன் (26), ராணிப்பேட்டை ஜெயபால் (63) ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
விசாரணையில் முன்விரோதம் காரணமாக மேற்படி கொலை நடந்துள்ளது தெரியவந்தது. மேற்படி எதிரிகளிடமிருந்து கொலை சம்பவத்திற்கு பயன்படுத்திய 3 கத்திகள், 3 செல்போன்கள் மற்றும் 1 கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி கொலை வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை தனிப்படை காவல் குழுவினர் தீவிரமாக தேடிவருகின்றனர். விசாரணைக்குப் பின்னர், கைது செய்யப்பட்ட 3 நபர்களும் இன்று (19.08.2023) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.