புட்டுப் புட்டு வைத்த சிசிடிவி கேமரா: ஆதாரத்துடன் உண்மையை விளக்கிய டிஜிபி சங்கர்ஜிவால், கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்
பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக கவர்னர் மாளிகை அளித்த புகாரில் உள்ள விவரங்கள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை என டிஜிபி சங்கர்ஜிவால், கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் மற்றும் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் ஆகியோர் சிசிடிவி ஆதாரங்களுடன் விளக்கினர்.

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அது தொடர்பாக கருக்கா வினோத்தை போலீசார் கைது செய்து செய்தனர். இந்நிலையில் போலீசார் சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என கவர்னர் தரப்பு போலீசில் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் எதுவும் உண்மையில்லை என டிஜிபி சங்கர்ஜிவால் நேற்று விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்த போது கவர்னர் தரப்பில் சொன்ன குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய் என தெரியவந்துள்ளது. அது தொடர்பாக இன்று மதியம் சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் டிஜிபி சங்கர்ஜிவால், சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர், தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் மற்றும் தென்சென்னை கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா ஆகியோர் சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் விளக்கம் அளித்தனர்.

கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்
கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் கூறுகையில், ‘சிடிடிவி வீடியோ காட்சிகளில் ‘கருக்கா வினோத்’ எங்கிருந்து வருகிறார் என்பது குறித்து முழுமையாக தெரியவந்துள்ளது. கருக்கா வினோத் நந்தனம் சிக்னலில் இருந்து தொடர்ச்சியாக தனியாக நடந்தே ஆளுநர் மாளிகை வரை கையில் பையுடன் வந்து சைதாப்பேட்டை மேம்பாலம், சின்னமலை மற்றும் தாலுகா அலுவலகம் அருகே வருகிறார். அப்போது தனது கைப்பையை தூக்கி வீசி விட்டு தான் வைத்திருந்த பெட்ரோல் பாட்டில்கள் நான்கையும் சட்டைக்குள் மறைத்து வைத்து, அங்கிருந்து சைதாப்பேட்டை நீதிமன்றம் தாண்டிச் செல்கிறார். அப்போதும் அவர் கையில் வைத்திருந்த பை எதுவும் இல்லாமல் இருந்துள்ளது.

இந்நிலையில் அங்கிருந்து அவர் நேரடியாக சென்று ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் பாட்டில்களை வீச முயற்சித்துள்ளார். அங்கு பணியில் இருந்த 5 காவலர்கள் உடனே அவரை தடுத்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கருக்கா வினோத் தனியாக பாதசாரி போன்று நடந்து வந்துள்ளார். 4 பெட்ரோல் பாட்டில்களில், இரண்டு பாட்டில்களை உள்ளே வைத்துக் கொண்டு மீதமுள்ள இரண்டை மட்டும் வீசி உள்ளார். ஆளுநர் மாளிகையில் உள்ள நபர்கள் அவரை மடக்கி பிடித்ததாக ஆளுநர் தரப்பில் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அது போன்ற ஒன்று அங்கு எங்கும் நடைபெறவில்லை. காவல்துறை சார்பில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஐந்து காவலர்கள் மட்டுமே அதை தடுத்து அவர்களிடம் இருந்து பெட்ரோல் பாட்டில்களை பிடுங்கி உள்ளனர். உடனடியாக ரோந்து போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

ஜனாதிபதி வருகையை அடுத்து பாதுகாப்பு குறித்து ராஜ்பவனுக்கு சென்றேன். ஆளுநரை சந்திக்கவில்லை. தற்போது வரை கருக்கா வினோத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்வதற்காக அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி அளித்த பின்புதான் எதற்காக குண்டு வீசினார் என்பது குறித்து முறையாக விசாரணை நடத்திய பின்னரே அவர் யார் யார் உடனெல்லாம் பேசி உள்ளார் என்பது குறித்து தெரியவரும்.
253 போலீசார் மூலம் ஆளுநர் மாளிகையை சுற்றி பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. ஆளுநர் செல்லும் இடங்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
124 IPC பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என ஆளுநர் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது. அது குறித்து விசாரணை செய்து வருகிறோம் சாட்சிகள் இருந்தால் அந்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்’’.

ஏடிஜிபி அருண்
ஏடிஜிபி அருண் பேசுகையில், ‘‘2022 ஏப்ரல் 19ஆம் தேதி அன்று மயிலாடுதுறையில் ஆளுநர் வாகனம் தாக்கப்பட்டது என்றும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யவில்லை என ஆளுநர் தரப்பு கூறிய குற்றச்சாட்டுக்கு ஏடிஜிபி அருண் வீடியோ மூலம் விளக்கம் அளித்தார். ஆளுநர் கான்வாய் வாகனம் கடந்து சென்ற பின்னர்தான் அங்கு கூடியிருந்தவர்கள் கருப்பு கொடிகளை சாலையில் வீசினர். ஆளுநரின் கான்வாய் வாகனம் முழுமையாக சென்ற பின்னர் அவை பின்னால் வந்த வாகனங்கள் மீது தான் விழுந்தன. அந்த விவகாரத்தில் ஆளுநர் தாக்கப்படவில்லை. இதுதான் வீடியோ காட்சிகளும் தெரிவிக்கின்றன. ஆளுநர் தாக்கப்பட்டாரா என்பது குறித்த பதிவு தவறானது. எப்ஐஆர் கூட பதிவு செய்யப்படவில்லை என தெரிவித்தார்கள். ஆனால் வழக்கு பதிவு செய்து 73 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 53 நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்ய இருக்கின்றோம்’’ என சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் தெரிவித்தார்.

டிஜிபி சங்கர்ஜிவால்
டிஜிபி சங்கர்ஜிவால் கூறியதாவது ‘‘சென்னை பாதுகாப்பான நகரம் என பல மாநிலங்கள் நாடுகள் தெரிவித்து வருகின்றன. சர்வே நடத்துவதில் கூட இதுதான் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் கூட காவல்துறை சார்பில் அது தெரிவிக்கப்பட்டிருந்தது. சென்னை மாநகரம் அமைதியாக தான் உள்ளது. அதுதான் சர்வே தெரிவிக்கின்றது. . சிறையில் இருந்து வெளியே வரும் பொழுது அதிகளவிலான நபர்கள் வெளியே வருவார்கள். அது போன்று தடை செய்யப்பட்ட அமைப்பு நபர்கள் இருந்தார்களா என்று தெரியவில்லை. அவர்களுடன் நடந்து வந்துள்ளார். ஆனால் அவர்களுக்கும், இவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது. அதனை சர்வே ஆய்வுகளே சிறந்த ஆதாரம்’’ என டிஜிபி சங்கர்ஜிவால் தெரிவித்தார்.